பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்ட நாடு நமது இந்திய நாடு. அறிவியல் தொழிற் நுட்பம் பண்டைய இந்தியாவில், ஏனைய உலக கலாசாரப் பகுதிகள் போலவே, வளர்ந்து வந்துள்ளது. வானவியலில் ஆரியபட்டர், கணிதவியலில் பாஸ்கரா, மருத்துவத்தில் சுஸ்ருதா, வேதியியலில் நாகார்ஜுனா என எழுதப்பட்ட அறிவியல் வரலாற்றில் பிரசித்தி பெற்றவர் பலர். உலகப் பிரசித்தி பெற்ற டமாஸ்கஸ் உடைவாள் என்று அறியப்பட்ட போர்வாள் தயாரிக்க பயன்படும் உறுதிமிக்க எஃகு, ஐரோப்பிய நவீன கப்பல்கள் வரும் முன்னரே கடல் பிரயாணம் செய்ய பயன்பட்ட மாலுமி சாஸ்திரம், நீர் தேக்கி அதிக நெல் உற்பத்தி செய்யும் சாகுபடி முறை என பல்வேறு தொழில்நுட்பங்களும் இந்தியாவில் சிறந்திருந்தது. கைவினைஞர்கள் என ஒதுக்கப்பட்டு பொதுவாக இத்தொழில்கள் வர்ணாஸ்ரம பிரிவில் தாழ் நிலை மக்களுக்கு என
விதிக்கப்பட்டிருந்தது. எனவே, பொதுவாக இவை அவ்வளவாக போற்றப்படாவிட்டாலும் இவையும் நமது அறிவியல் தொழிற் நுட்ப பாரம்பரியத்தின் சிகரங்கள் தாம். நவீன அறிவியல் என்பது இன்று சிலர் பழித்துக் கூறுவது போல மேலை ஐரோப்பிய நாடுகளின் சொத்து அல்ல. உலக அறிவுச் செல்வங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு அதன் மீது கட்டி எழுப்பப் பட்டது தான் நவீன அறிவியல். ஐரோப்பாவில் நவீன அறிவியல் பிறந்தாலும் அதன் தோற்றுவாய்க்கு பின்னே இந்திய அறிவியல், சீன
தொழில் நுட்பம், அரபிய அறிவியல் பரிசோதனைகள் என உலகின் சகல பகுதி மக்களின் கொடையும் உள்ளது.
காலனி ஆதிக்கச் சுழலில் ஐரோப்பியரின் வருகையை ஒட்டி இந்த நவீன அறிவியல் இந்தியாவில் அறிமுகமானது. முதலில் ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்கள் இந்தியர்களுக்கு தொழில் நுட்ப கல்வி மட்டும் கற்பித்து, காலனி ஆதிக்கத்தில் அவர்களது தொழில் மற்றும் அரசுப் பணிகளுக்கு அவர்கள் கீழ் பணி செய்யும் படித்த தொழில் திறன் மிக்க இந்தியர்களை மட்டுமே உருவாக்க முனைந்தனர். அறிவியல் ஆய்வு இந்தியர்களால் முடியாது என்றே கூறி வந்தனர்.
இந்திய விடுதலைப் போரின் ஒரு பகுதியாக சில அறிவுஜீவிகளின் முன்
முயற்சியின் தொடர்ச்சியாகவே அறிவியல் கல்வி மற்றும் நவீன அறிவியல் ஆய்வு இந்தியாவில் பரவி கால் ஊன்றியது. மகேந்திர லால் சர்க்கார் என்பவரால், 1876ல் இந்திய மக்கள் கொடுத்த நன்கொடை கொண்டு துவக்கப்பட்ட INDIAN ASSOCIATION FOR THE CULTIVATION OF SCIENCE என்ற அமைப்பில் தான் சி .வி.ராமன் ஆராய்ச்சி செய்து, 1930ல் அவர் பெயரில் இன்று அறியப்படும் ராமன் விளைவை கண்டுபிடித்தார். இந்த கண்டு பிடிப்புக்குத் தான் நோபல் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதே போல் INDIAN INSTITUTE OF SCIENCE எனும் நவீன ஆய்வு நிறுவனம்
பெங்களூரில் 1909ல் டாட்டா உதவியுடன் துவங்கப்பட்டது. காலனிய அரசு
இம்முயற்சிகளுக்கு அவ்வளவு ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.
ஆனால் இதில் வேதனை என்னவென்றால் காலனி ஆதிக்கத்தில் நாம் நோபல் பரிசு வென்றோம். ஆனால் விடுதலை அடைந்து அறுபது ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தியாவிலிருந்து இந்தியர் எவரும் இதுவரை நோபல் பரிசு பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. நோபல் பரிசு கிடைக்க வில்லை என்பது ஒருபுறம் கிடக்கட்டும்; நமது நாட்டின் அறிவியல் நிலை என்ன தெரியுமா? டேவிட் கிங் என்பார் 2004இல் நடத்திய ஆய்வில் 32 நாடுகளில் ஒப்பீட்டளவில் இந்தியாவின் இடம் 31. நமக்கு கீழே உள்ள நாடு ஈரான்! அடிப்படையில் அறிவு உற்பத்திதான் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் பணி அறிவு உற்பத்தி என்பது ஆய்வுக் கட்டுரைகள், அறிவுக் காப்புரிமம் முதலிய அறிவு
சொத்துரிமை ஆகும். இதில் பிரசுரிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரைகள் என்பது
அறிவு உற்பத்தியின் ஒரு குறியீடு. அறிவு உற்பத்தியில் நமது நிலைஎன்ன?
ஒப்பிடுதலுக்காக சீனாவை எடுத்துக்கொள்வோம். 1998இல் இந்தியா 17500 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் தான் வெளியிட்டது, இது 2008இல் சுமார் இருமடங்காகி 41,000 என உயர்ந்தது. ஆனால் இதே கால இடைவெளியில் சீனா 20500 லிருந்து 1,12,000 என உயர்ந்துள்ளது. நம்மை போல 2.7 மடங்கு அறிவியல் அறிவு உற்பத்தி சீனாவில் அதிகம்.
அறிவியல் அறிவு உற்பத்தி மற்றும் புதுமை படைத்தல் முதலிய வற்றில் மட்டும் நம் நாட்டின் நிலை பின்தங்கி இல்லை. நமது நாடு ஆய்வாளர்கள் படைக்கும் அறிவு மற்றும் புதுமையின் தாக்கம் / வீச்சும் குறைவு. நமது ஆய்வுக் கட்டுரைகளை பெரும்பாலும் எவரும் பயன்படுத்துவதில்லை; ஏனெனில் இவை அவ்வளவு தரம் தாழ்ந்தது அல்லது அற்பமான ஆய்வு..
அணுசக்தி, விண்வெளித் துறை, நவீன மருத்துவம், தொழில் அறிவியல் நுட்பம் முதலியவற்றில் உலகில் திறன் படைத்த நாடுகளில் இன்று இந்தியாவின் பின்னடைவிற்கு என்ன காரணம்? விடுதலை அடைந்த போது நேருவின் நவீன இந்தியாவை படைக்கும் மோகத்தின் காரணமாக அறிவியலுக்கு அரசியல் ஆதரவு இருந்தது. அன்றைய அறிவியல் தலைவர்கள் சி வி ராமன், மேஹநாத் சாஹா, கே. எஸ். கிருஷ்ணன், விக்ரம் சாராபாய் போன்றோர் அரசியல் செல்வாக்கு பெற்று தான் இருந்தனர். இருந்தும் அறுபது வருடம் கடந்த பின்னரும் அறிவியல் நிலை
முன்னேற்றமடையாததற்கு காரணம் என்ன?.
அறிவியல் மற்றும் அறிவியல் மனப்பான்மை மீது நேரு ஆர்வம் காட்டினாலும் உள்ளபடியே அறிவியல் வளர்ச்சிக்கு வேண்டிய நிதியை அரசு ஒதுக்கவில்லை. சில குறிப்பிட்ட கேந்திர அறிவியல் துறைகள் விண்வெளி, அணுசக்தி ஆகியவை நிதி பெற்றாலும், ஏனைய துறைகளின்பால் போதிய கவனம் இருக்கவில்லை. சமீப காலம்
வரை வெறும் 0.8 மட்டுமே இந்தியா தனது மொத்த பட்ஜெட்டில் அறிவியலுக்கு செலவழிக்கிறது. சீனா சுமார் 1.44 சதமும், தென் கொரியா 3.21 சதமும் செலவு செய்கிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
அறிவியல் தொழிற் நுட்ப ஆய்வுக்கு செலவு என்பது ஒரு பகுதியே ஆகும். கல்விக்கு முதலீடு என்பதும் முக்கிய அம்சமாகும். உயர்கல்விக்கு மாணவ/ மாணவியருக்கு தலா ரூ.400 தான் இந்தியா ஆண்டுக்கு செலவழிக்கிறது. ஆனால் சீனா 2728வும் , பிரேசில் 3986வும் மலேசியா 11790 வும் செலவழிக்கிறது.
உலகத்தில் உயர்கல்விக்கு அரசு மிகக் குறைந்த அளவு செலவழிப்பது
இந்தியாவில் தான். இந்த நிலையில் தான் உயர்கல்வியை தனியார் மயமாக்குவோம் எனவும், கட்டணம் வசூலித்துக் கல்வி எனும் கொள்கையும் பரவலாக பேசப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அரசு முதலீடு, அறிவியல் ஆய்வுக்கு செலவு என்பது தவிர இந்தியா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அமைப்பிலும் அடிப்படையில் சிக்கல் உள்ளது. சிறந்த மாணவர்களை மட்டும் கொண்டு செயல்படும் ஆய்வு நிறுவனங்கள் உள்ளபடியே உலகப் புகழ் மிக்கவை.இவற்றில் நடத்தப்படும் ஆய்வுகள் பெருமளவு உலகத் தாக்கம் செலுத்துபவை.
இத்தகைய உயர் ஆய்வு நிறுவனங்களுக்கு கிழே உள்ள பல்கலைக் கழகங்கள். நடுத்தரமான ஆய்வும், முதுகலை படிப்பும் மட்டும் நடத்தும் பல்கலைக் கழகங்கள் அவ்வளவு தாக்கம் செலுத்துபவை அல்ல. நிரந்தரமான பண நெருக்கடி, போதுமான ஆய்வுக்கூட வசதியின்மை, ஆசிரியர்கள் ஆய்வு செய்ய போதிய வசதியின்மை முதலியவை பல்கலைக் கழகங்களின் பொதுவான சிக்கல்கள். ஒருசில விரல் விட்டு எண்ணக்கூடிய பல்கலைக் கழகங்களில் நிலைமை சற்றே வித்தியாசமாக
இருந்தாலும், பொதுவே பல்கலைக்கழங்கள் செய்யும் ஆய்வுகள் தரும் தாக்கம் சொற்பமே ஆகும். பெரும்பாலும் தேர்வு நடத்தி சான்றிதழ் தரும் அமைப்பாகத் தான் இன்று பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் சுருங்கி விட்டன.
இந்திய உயர் கல்வி அமைப்பில் அடிமட்டத்தில் ஆய்வு என்றால் என்னவென்றே தெரியாத வெறும் இளம் கலை பட்டப் படிப்பு மட்டும் தரும் கல்லூரிகள் நிறைந்துள்ளன. அதாவது வேறு வகையில் கூறினால் நமது சமூகத்தின் கேடு கெட்ட வர்ணாஸ்ரம படிநிலை அமைப்பை நினைவு செய்யும் படிநிலை அமைப்பு தான் நமது உயர்கல்வி அமைப்பு.
அறிவியல் உயர் கல்வி அமைப்பு தான் பழுதானது என்றால் இங்கு கற்பிக்கப் படும் முறையும் அவலமானது. அறிவியல் என்பது, குறிப்பாக உயர்கல்வியில் அறிவியல் செய்திகளை கற்று மனனம் செய்வது அல்ல. உள்ளபடியே அறிவியல் முறை கற்றறிதல் என்பது தான் உயர் கல்வி. அறிவியல் ஆய்வு செய்யாமல் அறிவியல் முறையை கற்க முடியுமா என்ன? ஆயினும் பெரும்பாலும் முதுகலை படிப்பில் சில சமயம் முனைவர் படிப்பிலும் பெரும் மாணவ+மாணவியர் உள்ளபடியே ஆய்வு எதுவும்
செய்வதில்லை. பள்ளி செயல்முறை போன்று இயற்பியல் அல்லது வேதியியல் ஆய்வுக் கூடத்தில் ஏற்கனவே பலமுறை செய்துள்ள பரிசோதனைகளை செய்துபார்க்கும் பணி தான் நடக்கிறது. நோட்ஸ் என்ற பெயரில் பள்ளிக் கல்வியில் நடைபெறும் அதே மனப்பாடம் செய்யும் கல்வி முறை தான் உயர் கல்வியிலும் நீட்சி பெறுகிறது.
அதன் காரணமாகத் தான் முனைவர் பட்ட ஆய்வேடுகள் பல குறிப்பிடத் தகுந்தஆய்வு இதழ்களில் பிரசுரிப்பது கூட இல்லை. அவற்றின் தரம் அவ்வளவு தான். பட்டம் மட்டும் பெறத் தான் ஆய்வு; அதன் வழி அறிவு உற்பத்தி என்பது எதுவும் இல்லை என்பது தான் நிதர்சனம்.
தரமான ஆய்வு என்றால் அது தேசிய ஆய்வு நிறுவனங்களில் அல்லது விரல் விட்டு எண்ணக் கூடிய பல்கலைக் கழகங்களில் என்று இருக்கும் பட்சத்தில் உயர்கல்வி என்பது வெறும் ஜோக் தான்.
அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம். பிரின்ஸ்டன், எம் ஐ டி, முதலியவை ஆய்வுப் பல்கலைகழகங்கள். இவை தேசிய நிறுவனங்கள் இல்லை. ஆக்ஸ்போர்ட் கேம்ப்ரிட்ஜ் முதலியவையும் பல்கலைக் கழகங்கள். ஜப்பான், கொரியா, சீனா போன்ற எந்த நாட்டிலும் அறிவியல் ஆய்வு மற்றும் புதுமை படைத்தலில் பல்கலைக்கழகங்களுக்கு தனி மரியாதை உண்டு. இந்தியாவில் தான் பல்கலைக்கழங்களை கிடப்பில் போட்டு தனி தேசிய ஆய்வு நிறுவனங்கள் அறிவியல் ஆய்வு மற்றும் புதுமை படைத்தலில் முன்னணி அமைப்பாக உள்ளது.
அறிவியல் ஆய்வு என்பதும் புதுமை படைத்தல் என்பதும் பழையன கழித்தல் புதுமை வருதல் என்ற போக்கில் ஏற்படும் பழையன கழித்தல் என்பதாகும். இது மாணவ, மாணவியர் தமது ஆசிரியர்க்கு சிரம் தாழ்த்தி தலை குனிந்து மரியாதையை செலுத்துவதில் ஏற்படுவதில்லை. ஆசிரியர் கருத்துக்களை எதிர்த்து கேள்வி கேட்பதில் தான் புதுமை அடங்கியுள்ளது. இங்கு நாம் வகுப்பறை கண்ணியம்,ஒழுங்கு முதலியவை குறித்து பேசவில்லை. ஆசிரியர் கருத்தை மறுபேச்சின்றி ஏற்க வேண்டும் என்கிற மனப்பாங்கைத்தான் விமர்சிக்கிறோம்.
தனது வழிகாட்டி கூறியதை கேள்வி கேட்காமல் ஏற்பது; அதனை அப்படியே காலம் காலமாக அடுத்த தலைமுறைக்கு ஓதுவது என்கிற சடங்கு தான் அறிவியல் ஆய்வு என்ற பெயரில் பெரும்பாலும் நடைபெறுகிறது.
கேக் நடுவே திராட்சை பழம் போல நேர் மின்னேற்றம் கொண்ட அணுவின் ஊடே எலெக்ட்ரான் எதிர் மின்னேற்றம் கொண்டு பொதிந்துள்ளது என்ற கருத்தை கூறிய ஜ.ஜ தாம்சன் என்பரின் மாணவர் தான் ருதேர்போர்ட். இவர் தனது ஆசிரியரின் கருத்தை தவறு என நிறுவினார். தனது புதுமை கருத்தை நடுவே கருவில் குவிந்துள்ள நேர் மின்னேற்ற துகள் (நியூட்ரோன்) சூரியனை சுற்றும் கோள் போல அணுக்கருவை சுற்றும் எலெக்ட்ரான் என்ற கருத்தை முன்வைத்தார் ருதேர்போர்ட். அவரின் மாணவர் நீல்ஸ் போர் தனது ஆசிரியரின் கருத்தை தவறு
என நிறுவி போர் அணு மாதிரி கொள்கைளை உருவாக்கினார்.
ஆய்வில் வழிகாட்டியின் அறிவியல் கருத்தை தவறு என கூறுவது இருக்கட்டும், அவர் செய்யும் எழுத்து பிழையை திருத்தினால் கூட போதும்; என்ன இப்போவே உனக்கு எல்லாம் தெரியுமா? என்ற ஆணவப் பேச்சு தான் கேட்க வேண்டி வரும். நமது சமூகத்தில் இன்றும் நிலப்பிரபுத்துவ மனநிலை சிதையாமல் குடி கொண்டுள்ளது நமது பல்கலைக் கழக மற்றும் ஆய்வு நிறுவனங்களில் தான். நிறுவன இயக்குனர்/ பல்கலைக் கழக துணை வேந்தர் அரசர் போல வானளாவிய அதிகாரம் படைத்தவர் என்ற நிலை. அவரை எதிர்த்து யாரும் அறிவியல் ஆய்வு பூர்வமாக கூட கேள்வி கேட்கக் கூடாது என்கிற அதிகார மன நிலை முதலியவையும் இந்திய அறிவியலின் தரம் கெட்டுப் போனதற்கு காரணம். உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகமின்மை,அதிகாரிகளின் தலையீடு (ஒரு ஆய்வாளர் ஆய்வுக் கருத்தரங்கிற்கு போகலாமா கூடாதா என்பதைக் கூட, ஒப்புதல் வாங்க வேண்டும் என்ற பெயரில், பல்கலைக் கழக அல்லது அரசுத் துறை அதிகாரிகள் முடிவு செய்யும் அவல நிலை) இவை
எல்லாம் ஆய்வு நிறுவனங்கள் அமைப்புகள் தமது வீரியத்தை இழக்கும் நிலைக்குஇட்டுச் சென்றுள்ளது.
எந்த ஆய்வு என்பதிலும் வர்ணாஸ்ரம சிந்தனையின் தாக்கம் கூர்ந்து
கவனித்தால் புலப்படும். ஆய்வுப் பணி/ கற்பித்தல் செய்யும் ஆசிரியர் பணி ,அடிப்படை ஆய்வு/ பயன்பாட்டு ஆய்வு , மூளை உழைப்பு/ உடல் உழைப்பு
கோட்பாடு/ பரிசோதனை என முரணாகத் தான் ஆய்வு பார்க்கப்படுகிறது. ஆய்வுப்பணி, கோட்பாடு, மூளை உழைப்பு முதலிய தான் உயர்வாக பார்க்கும் நிலை இருக்கிறது. நமது நாட்டில் இயற்பியலில் கோட்பாடு ஆய்வு செய்வோர் பரிசோதனை ஆய்வு செய்பவர்களை விட பல மடங்கு அதிகம். பல மேலை நாடுகளில் பரிசோதனை ஆய்வு செய்யும் திறன் மிக்கவர்களை போற்றுவது போல நம் நாட்டில் செய்வதில்லை; அதன் காரணமாக மாணவ - மாணவியர் பெரும்பாலும் கோட்பாடு ஆய்வு
செய்யத் தான் பழகுகிறார்கள்.
அறிவியல் ஆய்வில் நிதி, ஆய்வு வசதி தவிர முக்கியமான முதலீடு மனிதவளம். மக்கள்தொகைக்கு 4663 பேர் அமெரிக்காவில் அறிவியல் தொழில் நுட்ப நிபுணர்கள். சீனாவில் பத்து லட்சம் மக்கள்தொகைக்கு 1071, தென் கொரியாவில் 4627 ஆனால், இந்தியாவில் இது வெறும் 137 தான்!
விடுதலை அடைந்த பொது இந்தியாவில் வெறும் 17 பல்கலைக்கழகங்கள் தான் இருந்தன. 2009இல் இது மொத்தம் 483என உயர்ந்துள்ளது; அதாவது முப்பது மடங்கு. ஆனால் இந்த வளர்ச்சி மிக சொற்பமே ஆகும். தென் கொரியாவில் உள்ள அளவு மக்கள் தொகைக்கு பல்கலைக்கழகம் என்ற விகிதத்தில் இந்தியாவில் இருக்க வேண்டுமெனில் உள்ளபடியே நம்மிடம் 2900 பல்கலைக்கழகம் இருக்க வேண்டும். அமெரிக்காபோல வேண்டுமெனில் 4000 இங்கிலாந்து போலவெனில் 3600 பல்கலைக்கழகங்கள் வேண்டும். ஆனால் இருப்பதோ வெறும் 483. உலகத் தரம் வாய்ந்த ஆண்டுக்கு
வெறும் 30 முனைவர் பட்ட மாணவ மாணவிகளை தான் தயார் செய்கிறது. இது கடலில் கரைத்த பெருங்காயம் போல தான். வேறு ஆய்வு நிறுவனங்களில் கூட இந்த அளவு சொற்பமேயாகும்.
மேலும் முக்கிய சிக்கல் உயர்கல்வி கற்க ஏற்படும் செலவு. இளம் கலை வகுப்பு வரை கூட நடுத்தர மக்களால் தமது குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க முடியும்.
அதன் பின்னர் மாணவ+மாணவியர் தமது பெற்றோருக்கு ஒரு பாரமாக மாறி சம்பளம் ஈட்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குறைந்த வசதி பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வரும் மாணவ மாணவியர் பற்றி கூறவே வேண்டாம். இளம் கலைக் கல்வி பெறுவதே பெரும்பாடு. இத்தகு பின்னணி கொண்டவர்கள் முதுகலை பட்டம் பெற படிப்பது அவ்வளவு எளிதல்ல. முதுகலை பட்டம் பெற்றபின் முனைவர் பட்டப் படிப்பில் உதவித் தொகை கிடைக்கலாம் .ஆனால் முதுகலை பட்டப் படிப்பின் போது சிக்கல் தான். எனவே உயர்கல்வி கட்டணம் குறைவாக இருப்பது
மட்டுமின்றி வசதி குறைவான பின்னணியிலிருந்து வரும் மாணவ மாணவியருக்கு முதுகலை பட்ட நிலையிலிருந்தே உதவி தொகை மட்டுமல்ல ஈட்டுத் தொகையும் வழங்க வேண்டும். உயர் கல்வி வாய்ப்புக் குறைவின் காரணமாக இன்று இளம்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவ மாணவிகளில் வெறும் ஒரு சதவிகிதம் தான்முனைவர் பட்ட ஆய்வுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருபத்தியோராம் நூற்றாண்டில் பொருளாதாரம் அறிவு சார் பொருளாதாரமாக இருக்கும் எனப்படுகிறது. அறிவு சார் பொருளாதாரத்தில் இந்தியா தனது நிலையை மேம்படுத்த வேண்டுமெனில் அதன் அறிவு சார் மனித வளத்தை பெருக்க வேண்டும்; தரத்தை உயர்த்தவேண்டும்.
ஆகவே இன்றைய சுழலில் உயர்கல்வி நிறுவனங்கள் பெருமளவு அதிகரிக்கப்படவேண்டும் என்பதுவே முதல் படி. இதற்கு தீர்வாக இரண்டு வழிகள் நம் முன் வைக்கப்படுகிறது முதலாவது தீர்வு திறந்தவெளி பல்கலைக் கழகங்கள்; இரண்டாவது அந்நிய பல்கலைக் கழகங்களை
அவர்களது கடை திறக்க அனுமதிப்பது.
திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் உள்ளபடியே திறன் மேம்பாட்டிற்கும் புதிய திறன் வளர்த்துக் கொள்ளவும் பயன்படும் தான். அதுபோல கற்கும்
சமுதாயத்துக்கு திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு ஆற்றமுடியும்
ஆனால் அடிப்படை உயர் கல்வி ஆய்வு மாணவர்கள் தயாரித்தலில் இவற்றின் பங்கு அவ்வளவாக இருக்கமுடியாது. திறந்தவெளி பல்கலைக்கழகங்களை மட்டும் நம்பித்தான் உயர் கல்வி விரிவாக்கம் எனில் தரம் மிகவும் குறையும்.
அந்நிய பல்கலைக் கழகங்களைப் பொறுத்தவரை அவையும் திறந்தவெளி
பல்கலைக்கழகங்கள் போல தான். அவை எதுவும் இங்கு பல்கலைக்கழகத்தை நிறுவ முன்வருவதில்லை. ஆகவே, அவையும் உள்ளபடியே தீர்வாகாது.மொத்தத்தில் உயர் கல்வி அமைப்பில் பெரும் மாற்றம், போதுமான நிதி ஒதுக்கீடு, தரம் மேம்பட உயர்கல்வி ஆசிரியர்களுக்கு ஆய்வு செய்ய வசதி, ஆய்வு மாணவ - மாணவிகளுக்கு
போதுமான உபகார சம்பளம் முதலியவற்றின் மீது உடனடி கவனம் தேவை.
நன்றி: த.வி.வெங்கடேஸ்வரன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்ட நாடு நமது இந்திய நாடு. அறிவியல் தொழிற் நுட்பம் பண்டைய இந்தியாவில், ஏனைய உலக கலாசாரப் ப...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
-
மண்பானை செய்திடும் ஒரு குயவன் தான் கொண்டுசென்ற பானைகளை யெல்லாம் விற்றுவிட்டு சந்தையிலிருந்து திரும்பிவந்து கொண்டிருக்கும் போது, வழியில் கண்...
1 கருத்து:
இன்றைய இந்தியாவின் அறிவியல் நிலையை படம் பிடித்துக் காட்டும் அருமையான கட்டுரை
கருத்துரையிடுக