ஞாயிறு, 17 ஜனவரி, 2010

நகரத்தை நோக்கி

நகரத்தை நோக்கி


தற்போது போட்டி மிகுந்த நவீன யுகத்தில் மக்கள் வாழ்வதற்காக மிகவும் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மனிதனும் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான உணவு, உடை, உறையுள் ஆகிய தேவைகளை பெறுவதற்காக மிகவும் கடினமாக போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களிடம் வாங்கும் திறன் (Purchasing power) போதுமான அளவிற்கு இருக்க வேண்டும்.

மக்கள் அனைவருக்கும் போதுமான அளவிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் பொருள் ஈட்டும் சூழ்நிலைக்கு உருவாக்கப்பட்டால்தான் இந்த வாங்கும் திறன் தானாகவே மக்களிடம் உயரும்.

அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் திட்டத்தால் ஒரு நாடு ஒரளவு மக்களின் மன நிறைவுடன் வாழ வழி வகுக்கும் சிறந்த திட்டமாகும்.

மக்கள் தாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளை பெறுவதற்காக வேலைவாய்ப்பு அளிக்க கூடிய இடம் நகர்புறங்களே என முடிவு செய்து அனைவரும் நகரத்தைநோக்கி நகரத்தொடங்கு கின்றனர்.

இதனால் ஏற்கனவே அதிக மக்கள் தொகையினால் திண்டாடும் நகரங்கள் மேலும் சிரமப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

உதாரணமாக அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தை எடுத்து கொண்டோமானால் ஒவ்வொருநாள் இரவும் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிரம்பி வழிகின்ற அளவிற்கு மக்கள் கூட்டம் அலை மோதுவது போன்று இருந்தது .

ஏன் நகரத்ததை நோக்கி இவர்கள் செல்கின்றனர்?.கிராாமத்தில் வருடம் முழுவதும் இவர்களுக்கு பணி செய்வதற்கான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நகரங்களுக்கு சென்றால் போதுமான வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் தம்முடைய பெண்டு,பிள்ளைகளை அழைத்துகொண்டு மூட்டை முடிச்சுகளுடன் கிராமத்தை விட்டே செல்லத் தயாராகின்றனர்.

இந்தியா ஓரு விவசாய நாடு என்பதும் 75% மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் தமிழ்நாட்டின் விவசாயம் பருவகாற்றின் சூதாட்டத்தை நம்பியே உள்ளது என்பதும் தெரிந்ததே .

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக போதுமான மழையில்லாத காரணத்தால் விவசாயம் செய்ய வழியில்லாத நிலையில் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் காணி நிலம், கரவை மாடு ஒன்று, காளை மாடு இரண்டு, முருங்கை மரம் ஒன்று ஆகியன இருந்தால் அந்த சிறிய குடும்பம் வாழ்வதற்கு போதுமான வருமானத்தை ஈட்டுகின்ற நிலைமை இருக்கும் என்பது சான்றோரின் அறிவுரையாகும். பருவ மழையின் பகைமையினால் நிலமுள்ளவர்களே அல்லாடுகின்ற சூழ்நிலையில் நிலமற்ற விவசாயிகளின் நிலை சொல்லவே வேண்டியதில்லை.

அதனால் நகரங்கள் தங்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு அளிக்கும் என எண்ணி கூட்டம் கூட்டமாக நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர்.

கிராமத்தில் வாழும் நிலமற்ற கூலிகள் கூட ஒவ்வொரு குடும்பத்தில் ஒரு ஜதை உழவு மாடும், ஒரு கரவை மாடும், ஒண்டுவதற்கு ஒரு குடிசையும், அதில் ஓரமாக ஒரு முருங்கை மரமும் வைத்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நிலத்தை வளமாக்குகின்றோம் என்று நிலவள வங்கிகளும், வணிக வங்கிகளும் டிராக்டர்களை கடனில் வழங்கி ஒரு பக்கம் சில குறு விவசாயிகளை கடனாளியாக்கியது மட்டுமல்லாது நிலமற்ற விவசாயிகளின் உழவு மாடுகளுக்கு வேலையில்லாத நிலையை ஏற்படுத்தி அவைகளை விற்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளின.

சரி உழவு மாடுகளுக்கு பதிலாக டிராக்டர் வந்து கிராமப்புற உழவரிகளின் பிழைப்பை தடுத்தது என்றால் மறுபக்கம் இந்த மாடுகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்களாக பயன்பட்ட கிராமத்துக்கு அருகிலிருக்கும் சிறு சிறு முட்புதர்காடுகளில் அரசானது காடுகளை வளர்க்கிறோம் என்று மண்ணின் அனைத்து நீரினையும் அறவே உறிஞ்சி நீர்வளமற்ற வறண்டபாலையாக்கிடும் யூகலிப்டஸ் என்னும் நீலகிரித்தைல மரங்களை மேய்ச்சல் நிலங்களில் வளர்ந்திருந்த முட்புதர்களை அழித்து பயிரிட்டனர். இதனால் கிராம மக்களின் கால்நடைகளான ஆடு மாடுகள் மேய்ச்சலுக்காக அருகிலிருக்கும் காட்டினை நோக்கி செல்ல முடியாமல் தடுக்கபட்டுள்ளன. இது மட்டுமா, அரை குறை வேலைவாய்ப்பில் கிடைத்த உணவு தானியத்தை சமைப்பதற்காக எரிப்பதற்கு தேவையான விறகு இந்த காடுகளிலிருந்து கிடைத்ததையும் தடுத்து விட்டனர்.

மாடுகளுக்கும் வேலையில்லை மாடுகள் வளர்ப்பதற்கு மேய்ச்சல் நிலங்களும் இல்லை. மழையில்லாததால் மாடுகள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்ற நிச்சயமற்ற நிலையில் தங்களின் ஆடு மாடுகளை அடிமாட்டிற்கு அனுப்பிவிட்டனர்.

அரைகுறையாக வேலைவாய்ப்பை வழங்ககூடிய விவசாய வேலைகளும் மழையில்லாததால் கிடைக்கவில்லை அதில் கிடைத்த உணவு தானியங்களை சமைப்பதற்கு தேவையான எரிபொருள் (விறகு, சுள்ளி) கிடைக்காத நிலையில் மக்கள் உணவுக்கே வழியின்றி நகரங்களுக்கு சென்றால் வயிராற உண்பதற்கு உணவாவது கிடைக்காதா என்ற நம்பிக்கையில் நகரங்களை நோக்கி நகர்கின்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

உணவுத்தேவை மட்டுமல்லாது நகரத்திற்கு சென்றால் தங்களின் பிள்ளைகள் நல்ல தரமான கல்வி பெற்று பெரிய பெரிய பணிக்கு சென்று தங்களையும் தங்கள் குடும்பத்தையும் கரை சேர்ப்பதற்கு ஆவண செய்வார்கள் என்ற அற்ப நம்பிக்கையுடன் தங்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக நடுத்தர மக்கள் நகரத்தை நோக்கி நகருகின்றனர்.

கிராமங்களில் வாழும்போது அவசரஅவசியத்திற்கு போதுமான அடிப்படை மருத்துவ வசதிகூட கிடைக்ககூடிய நிலைமையில் உயிரை காப்பாற்றுகின்ற மருத்துவ வசதி கிடைப்பதற்காக நகரங்களை நோக்கி நகர்கின்றனர்.

ஆக ஒவ்வொரு கிராமத்திற்கு அடிப்படை தேவைகளான மருத்துவ வசதி, தரமான கல்விக் கூடங்கள், அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டங்கள் என்பனபோன்ற அக்கிராமத்திற்கு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாக்கபட்டால் மட்டுமே கிராம மக்கள் நகரத்தை நோக்கி நகருகின்ற நிலை ஏற்படாது .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...