திங்கள், 18 ஜனவரி, 2010

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விளக்கம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விளக்கம்


நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பயன்படுத்தும் முக்கியமான சொற்கள்:

1.Consideration = பொருள் அல்லது சேவைக்காக வழங்கப்படும் விலை

2.Defect = பொருளில் உள்ள குறைபாடு

3.Deficiency = சேவையில் ஏற்படும் குறைபாடு

4.Service = சேவை

5.Restriction trade practice = கட்டுப்படுத்தப்பட்ட வியாபார செயல்

6.Unfair trade practice = நேர்மையற்ற வியாபார செயல்



1. நுகர்வோர் என்பவர் யார்? அவருடைய உரிமை என்ன?

தன்னுடைய பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட விலை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்யும் அல்லது சேவையை பெறும் எந்த ஒரு தனி நபரும் நுகர்வோர் என அழைக்கப்படுவார். ஆனால் இதனை வியாபாரத்திற்காக பயன்படுத்துபவர் அல்லது மறுவிற்பனை செய்பவர் நுகர்வோராக கருதப்படமாட்டார்.

நுகர்வோரின் உரிமைகள் பின்வருமாறு:

1.குறைபாடான பொருள் அல்லது சேவையினால் பாதிக்காமல் காத்துக்கொள்ளும் உரிமை

2.கொள்முதல் செய்யப்படும் பொருள்/சேவை பற்றிய முழு விவரங்களை பெறுவதற்கான உரிமை.

3.தமக்கு தேவையான பொருட்களை/சேவையை தெரிவு செய்வதற்கான உரிமை.

4.குறைபாடான பொருட்கள்/சேவையை பெற்றிருந்தால் அது பற்றி கேட்பதற்கான உரிமை.

5.இந்த குறையை தீர்ப்பதற்காக நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் உரிமை.

6.தம்முடைய நுகர்வோர் உரிமையை சுதந்திரமாக செயல்படுத்துவதற்காக நுகர்வோர் கல்வி பெறுதவதற்கான உரிமை.

2. பொருட்களை கொள்முதல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை யாவை?

கொள்முதல் செய்யும் பொருள் மூலப்படிவமான பொருள்தானா (original) என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னர் குறை ஏதும் தெரிந்தால் நிவர்த்தி செய்யும் உத்திரவாதத்தை செயல்படுத்த இது தேவைப்படும். மேலோட்டமாக பார்த்த உடனேயே தெரிகின்ற குறையேதும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி கொள்க. பொருளுடன் வரும் விவரங்களை படித்து அந்த பொருளை பற்றிய முழுவதும் தெரிந்து கொள்க. ISI, Agmark போன்று பொருளுக்கு தரச்சான்று ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து கொள்முதல் செய்க.

3. நுகர்வோர் தாம் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிந்து உடனேயே நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா?

இல்லை. முதலில் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் சென்று தாம் கொள்முதல் செய்த பொருளின் குறைபாட்டை எடுத்துக்கூறி சரி செய்து கொடுக்கும்படி கூற வேண்டும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் இவ்வாறு புகார் வந்தவுடன் சரியான பொருட்களை உடன் மாற்றி கொடுத்துவிடுவர். அல்லது நுகர்வோரிடம் பெற்ற விலைக்கான தொகையை திருப்பி வழங்கிவிடுவார்.

4. நுகர்வோர் எப்போது நீதிமன்றத்தை அனுக வேண்டும்?

விற்பனையாளரிடம்/உற்பத்தியாளரிடம் நேரடியாக சென்று கேட்டும் குறையை நிவர்த்தி செய்யாமல் மறுத்தளித்தல் செய்யும்போது அல்லது தம்முடைய குறைகளை கேட்காமல் மறுப்பது தெரியவரும்போது மேற்படி பொருள் கொள்முதல் செய்ததற்கான பட்டியல், உத்திரவாதம் ஏதும் அளித்திருந்தால் அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தை அனுகி தாம் பாதிக்கப்பட்டதை முறையீடு செய்யலாம்.

5. கட்டணம் ஏதுமின்றி சேவை புரிபவரிடம் பெரும் குறைபாடான சேவைக்கு நீதிமன்றத்திற்கு அனுக முடியுமா?

எந்த ஒரு நுகர்வோரும் தாம் பெற்ற பொருள்/சேவைக்கு ஈடாக விலையை இதனை அளிப்பவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்பதே நுகர்வோர் வழக்கின் அடிப்படையாகும். இலவசமாக மருத்துவ சேவை புரியும் அரசு மருத்துவமனையின் மீது பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிவாரணம் கோரி வழக்கு தொடுக்க முடியாது. ஒரு ரூபாயாவது கட்டணமாக செலுத்தி ரசீது பெற்று சேவை பெற்றிருந்தால் வழக்கு தொடுக்க முடியும்.

6. இவ்வாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதால் என்னென்ன நிவாரணம் கிடைக்கும்?

இந்த வழக்கு சரியானதுதான், நுகர்வோர் குறைபாடுடைய பொருள்/சேவையால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என நுகர்வோர் நீதிமன்றம் கருதுமாயின் உடன் கீழ்காணும் நிவாரணங்களை செய்யும்படி எதிர்தரப்பினருக்கு உத்திரவிடுகிறது.

1 குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையை உடனடியாக அகற்றும்படி கோருதல்

2.குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டும்படி கோருதல்

3.இந்த வழக்கிற்கான செலவு தொகையை வழங்கும்படி கோருதல்

4.குறைபாடுடைய பொருளுக்கு பதிலாக அதே மாதிரியான வேறு நல்ல பொருளை வழங்கும்படி கோருதல்

5.பெற்ற குறைபாடுடைய பொருள்/சேவையின் விலையை உடனடியாக திரும்ப வழங்கும்படி கோருதல்

6.உடனடியாக இவ்வாறான நேர்மையற்ற வியாபார செயலை மேலும் தொடராமல் நிறுத்தம் செய்யும்படி உத்திரவிடுதல்

7.அபாயம் விளைவிக்கும் பொருள் ஏதும் சந்தையிடப்பட்டிருந்தால் உடனடியாக அப்பொருட்கள் சந்தையிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி உத்திரவிடுதல்

7. ஈட்டுத்தொகை பெறுவதற்கு ஏதேனும் உச்ச வரம்பு உள்ளதா?

இல்லை. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நடைமுறைக்கு பொருந்த கூடிய அளவிற்கு ஈட்டுத்தொகை இருக்க வேண்டும்.

8. ஒரு பொருள் அல்லது சேவை பெறும்போது ஏற்படும் குறைபாட்டில் ஒரு பகுதி குறையை மட்டும் தீர்க்கும்படி நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியுமா?

ஆம். ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் குறைபாடு உடையதாயின் மற்றவை சரியாக உள்ளது என தெரியும்போது அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் சரிசெய்து தரும்படி நுகர்வோர் நீதி மன்றத்தை அனுக முடியும்.

9. இந்த வழக்கினை வழக்கறிஞர் மூலமாக மட்டும்தான் அனுக வேண்டுமா?

தேவையில்லை. பாதிக்கப்பட்ட நுகர்வோர் நேரடியாக நீதிமன்றத்தை அனுகலாம், மிகவும் சிக்கலான நிலையில் மட்டும் வழக்கறிஞரை அனுகுவது நல்லது.

10 நுகர்வோர் வழக்கு தொடுக்கும்போது என்னென்ன காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்?

1.குறைபாடுடைய பொருள் அல்லது சேவையின் பெயர்

2.வழக்கு தொடுப்பவரின் பெயர் மற்றும் முழு விவரங்கள் அவ்வாறே எதிர்தரப்பாளரின் முழு விவரங்கள்

3.இந்த நிகழ்வுகள், எப்போது. எங்கே எவ்வாறு நிகழ்ந்தது

4.எதிர்தரப்பாளர் ஏன் இதற்கு பதிலீடு செய்ய வேண்டும்? அல்லது பொறுப்பு வகிக்க வேண்டும்? அதற்கான உத்திரவாதம் உள்ளதா? பட்டியல் உள்ளதா? விலை கொடுக்கப்பட்டுள்ளதா?

5.குற்றச்சாட்டிற்கான ஆதாரங்கள், பட்டியல், பணம் கொடுத்ததற்கான ரசீதுகள், உத்திரவாதம் பெற்றதற்கான ஆதாரங்கள், நேரில் அனுகி கேட்டபோது மறுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அல்லது எழுத்து மூலம் நிவர்த்தி செய்யும்படி கோரி மறுத்ததற்கான ஆதாரங்கள்

6.பொருள்/சேவை கொள்முதல் செய்து பாதிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.

11. வழக்கை எங்கு பதிவு செய்ய வேண்டும்?

பாதிப்பு எங்கு ஏற்பட்டதோ அந்த இடத்தினுடைய மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். மதிப்பீடு தொகை 25 இலட்சம் வரையிருந்தால் மாவட்ட நுகர்வோர் மன்றத்திலும் 25 இலட்சம் முதல் 1 கோடி வரை மாநில நுகர்வோர் மன்றத்திலும் 1 கோடிக்கும் மேல் எனில் தேசிய நுகர்வோர் மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம்.

12. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கை தொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து இதற்கான அனைத்து ஆவன நகல்களை இணைத்து பொருள் மதிப்பிற்கு தகுத்நவாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, பதிவு தபால் மூலமாகவோ. தொலைநகல் மூலமாகவோ, விரைவு தபால் மூலமாகவோ வழக்குகளை பதிவு செய்து இந்த வழக்கின் நகலை எதிர் தரப்பாருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

13. நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மறுத்து மேல் முறையீடு எவ்வாறு செய்வது?

நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்ட 30 தினங்களுக்குள் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பாயின் மாநில மன்றத்திலும் மாநில மன்ற தீர்ப்பாயின் தேசிய மன்றத்திலும், தேசிய மன்ற தீர்ப்பு எனில் உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம். அப்போது அனைத்து நடைமுறைகளுடன் நீதிமன்ற தீர்ப்பு நகலையும் இணைத்து மேல் முறையீட்டிற்கு மனு செய்ய வேண்டும்.

இந்த முப்பது நாட்கள் என்ற வரம்பை நீதி மன்றம் விரும்பினால் சரியான காரணத்திற்காகவே இந்த கால தாமதம் ஆகிவிட்டது எனக்கருதி வழக்கினை ஏற்றுக்கொள்ளும்.

14. மேல் முறையீட்டின்போது நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?

நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் ஈடுகட்டும் தொகையின் மதிப்பில் 50% அல்லது ரூ.2500 எது குறைவோ அதனை மாநில மன்றத்திற்கு ரூ.35000 தேசிய மன்றத்திற்கு ரூ.5000 உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய தொகையை செலுத்த வேண்டும்.

15. நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை எதிர்தரப்பாளர் நடைமுறைபடுத்தவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

எதிர்தரப்பாளர் உத்தரவை ஏற்று செயல்படுத்தவில்லை என்றால் அது ஒரு குற்றச்செயலாகும். குறைந்தது ஒரு மாதம் அதிக பட்சம் மூன்று மாதம் சிறை தண்டனையும், தண்டத் தொகையாக ரூ.2000 அதிக பட்சம் ரூ.10000 மட்டும் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். இடைக்கால உத்தரவு ஏதும் நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுத்தாது.

இந்நிலையில் நுகர்வோர் என்ன செய்ய வேண்டும்?

இந்த உத்தரவை செயற்படுத்த நுகர்வோர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தால் அந்த தொகைக்கான சான்றுகளை நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு நிலவரி வசூலிப்பது போன்று வசூலிக்கும்படி அனுப்பி வைக்கும்.

16. நுகர்வோர் நீதிமன்றத்தின் செயல்பாடு வரன்முறை யாவை?

குற்றவியல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி போன்று வழக்குகளை நடத்துவதற்கான அனைத்து உரிமைகளும் நுகர்வோர் மன்ற நீதிபதிக்கு உள்ளது.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

சர்க்கரை ஆலைகளில் கரும்பிற்கான விலைக்கொள்கை

சர்க்கரை ஆலைகளில் கரும்பிற்கான விலைக்கொள்கை




சர்க்கரை உற்பத்தி விவசாயம் சார்ந்த தொழிலாகவும் அதிகபட்ச வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய உதவும் தொழிலாகவும் இருந்து வருகிறது. ஒரு விவசாயி நட்டமென்று தெரிந்தும் தன்னுடைய வாழ்வாதாராத்திற்காக வேறு வழியில்லாமல் விவசாயத்தை தொடர்ந்து செய்வதை போன்று சர்க்கரை ஆலைகளும் தெரிந்தே நட்டத்திற்காக இயங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.



விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்று ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொருளின் தரம் அந்த பொருளின் அளிப்பிற்கு ஏற்றவாறு வணிகர்களால் விலை நிர்ணயிக்கப்பட்டு விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.



அவ்வாறே கரும்பிற்கும் குறைந்தபட்ச விலை என்றும் மாநில அரசு பரிந்துறை விலை என்றும் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யப்படுகிறது. பொருளின் தரம் எவ்வாறு இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு ஆண்டு முழுவதும் ஒரே கொள்முதல் விலையை மட்டும் வழங்கப்பட வேண்டும்.



உதாரணமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை சர்க்கரை கட்டுமானம் சதவிதம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் கரும்பின் விளைச்சலும் எடையும் மிக அதிகமாக இருக்கும்.



ஜனவரியிலிருந்து மார்சு வரை சர்க்கரை கட்டுமானம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் கரும்பின் விளைச்சலும் எடையும் மிகக்குறைவாக இருக்கும். இதனால் முதல் மூன்று மாதம் கரும்பினை அனுப்பும் விவசாயிகளுக்கு லாபமாகவும் சர்க்கரை ஆலைக்கு நட்டமாகவும் அடுத்த மூன்று மாதங்களில் சர்க்கரை ஆலைகளுக்கு லாபமாகவும் விவசாயிகளுக்கு நட்டமாகவும் இருக்கின்றது. இவ்வாறு ஒரு சமயத்தில் ஒரு சாராருக்கு நட்டமாகவும் மற்றொரு சாராருக்கு இலாபமாகவும் ஏற்படுவதை சமநிலைப்படுத்த அந்தந்த மாதத்தின் சர்க்கரை கட்டுமானத்தின் அடிப்படையில் கரும்பிற்கான விலைநிர்ணயம் செய்வதே இருத்தரப்பினருக்கும் ஏற்புடைய வழியாகும்.



இரண்டாவதாக மரத்தை நடுபவர் ஒருவரும் அதன் பயனை அனுபவிப்பர் வேறொருவராகவும் இருப்பது பொதுவான நடைமுறையாகும். ஏனெனில் மரம் வளர்ப்பு ஒரு நீண்ட கால செயல்திட்டமாகும்.



அதே போன்று கடந்த அரவைப்பருவத்தின் சர்க்கரை கட்டுமானத்தின் அடிப்படையில் வரும் அரவைப்பருவத்திற்கு கரும்பிற்கான விலையாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இது ஒரு சாராருக்கு பாதகமாகவும் மற்றொரு சாராருக்கு சாதகமாகவும் ஆன செயலாகும்.



உதாரணமாக 2003-04 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் மழை இல்லாததால் குறைந்த அளவு கரும்பு மகசூலினால் அதிக சர்க்கரை கட்டுமானம் கிடைத்ததன் அடிப்படையில். அதற்கடுத்த ஆண்டு நல்ல மழையால் கூடுதலான கரும்பு மகசூலுக்கு அதிக விலைபெற்றனர். வறட்சியில் பயிரிட்டவர்களின் குறைந்த மகசூலிற்கு குறைந்த கரும்பு விலையும் நல்ல நிலையில் பயிரிட்டு அதிக மகசூலின்போது அதிக கரும்பு விலையும் பெற்றனர். அந்தந்த ஆண்டு சர்க்கரை கட்டுமானத்திற்கு ஏற்ப அந்தந்த ஆண்டிற்கான கரும்பின் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்வதே சாலச்சிறந்தது.



மூன்றாவதாக சில நேரங்களில் மத்திய அரசின் குறைந்தபட்ச விலைமட்டும் கரும்பிற்கு வழங்குவார்கள் அப்போது கரும்பு கட்டுப்பாடு சட்டம் பிரிவு 5எ-வின்படி குறிப்பிட்ட ஆண்டு ஈட்டக்கூடிய இலாபத்தில் 50%-ஐ கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கூடுதல் விலையாக வழங்கப்படுகிறது.



அந்ததந்த ஆண்டில் உற்பத்தியாகும் சர்க்கரை ஏறத்தாழ பன்னிரண்டு மாதம் அதாவது அடுத்த ஆண்டுவரை இருப்பில் இருக்கும் அதனால் சரக்கிருப்பின் மதிப்பை அந்த வருட முடிவில் உள்ள விலைக்கு ஏற்ப மதிப்பிடப்பட்டு இலாபம் கணக்கிடப்படுகிறது.



அவ்வாறு இருப்பில் உள்ள சர்க்கரை அதற்கடுத்த ஆண்டில் சரக்கிருப்பின் மதிப்பைவிட குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ விற்கப்படுவதால் கிடைக்கக்கூடிய இலாபம்/நட்டம் ஆனது அவ்வாறு விற்பனை செய்யப்படும் ஆண்டுகளின் இலாபம் நட்டம் கணக்கிடுவதற்காக கணக்கில் கொண்டு கரும்பிற்கான கூடுதல் 5எ விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுவும் யாரோ பணி செய்ய யாரோ அனுபவிக்கும் சமச்சீரற்ற தன்மையாகும். ஆண்டு முழுவதும் விற்ற சராசரி விற்பனை விலையில் குறிப்பிட்ட ஆண்டடின் இறுதி இருப்பில் இருக்கும் சரக்குகள் மதிப்பாக கணக்கில் கொண்டு அந்த ஆண்டின் இலாபம் நட்டம் கணக்கிட்டு கரும்பிற்கான 5எ விலை நிர்ணயம் செய்வதுதான் சரியான நடைமுறையாகும். இவ்வாறு இந்த மூன்று கொள்கையும் கடைப்பிடித்தால் யாருக்கும் பாதகம் ஆகாமல் சாதகமாகவும் இல்லாமல் சமமான நிலை ஏற்படும் என்பது திண்ணம்.

சர்க்கரை உற்பத்தி சுழற்சி

சர்க்கரை உற்பத்தி சுழற்சி




இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி மிக முக்கியமான விவசாயம் சார்ந்த தொழிலாக இருந்து வருகிறது. இது நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்க கூடிய தொழிலாகவும் இருந்து வருகிறது. உலகின் சர்க்கரை உற்பத்தியில் இந்திய இரண்டாம் இடத்திலிருந்து இப்போது முதலிடத்தை வகிக்கிறது.



வியாபாரத்தில் இருக்கும் பொதுவான ஏற்ற இறக்கங்களின் சுழற்சி சர்க்கரை தொழிலிலும் 4 முதல் ஏழாண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. 2002-2003 ஆம் ஆண்டுகளில் கரும்பு மகசூல் அதிகமாகி சர்க்கரை உற்பத்தி உயர்ந்தது. அதனால் விற்பனை விலை வீழ்ச்சியடைந்தது. மேலும் கரும்பின் விலை அதிகமாக இருந்ததால் கரும்பிற்கான கிரைய பட்டுவாடா தாமதமானது. இதனால் விவசாயிகள் கரும்பைத்தவிர்த்து மற்ற பயிர்களுக்கு மாறினார்கள். இதன் தொடர்ச்சியாக 2003-2004 ஆண்டுகளில் கரும்பு உற்பத்தி குறைந்தது. சர்க்கரை உற்பத்தியும் குறைந்தது. இதனால் உள்நாட்டில் சர்க்கரை விலை அதிகரித்தது. இதே சமயத்தில் உலக அளவிலும் சர்க்கரை விலை உயர்ந்தது. கரும்பிற்கான தேவை அதிகமானதால் கரும்பின் விலை மீண்டும் உயர்ந்தது. 2004-2005ல் இதே நிலை நீடித்ததாலும் நல்ல மழை பொழிவு இருந்ததாலும் விவசாயிகள் கூடுதலான கரும்பு பயிரிட ஆரம்பித்தனர். அதனால் 2006-2007ல் சர்க்கரை உற்பத்தி அதிகமானது அதனுடைய பாதிப்பால் சர்க்கரை விலை மிகவும் குறைந்து விவசாயிகளுக்கு கரும்பு கிரையத் தொகை பட்டுவாடவிலும் காலதாமதமாகும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறான வியாபார சுழற்சி 4 முதல் 7 ஆண்டு காலத்திற்கு பதிலாக ஏன் குறுகிய கால அவகாசத்தில் ஏற்படுகிறது. சர்க்கரை அத்தியாவசிய பொருளின் கீழ்வருகறது அதனால் உள் நாட்டில் சர்க்கரை விலை அதிகமானதால் ஜீன் 2006ல் சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்து விநியோக அளவும் விடுவிப்பு ஆலையும் இந்த நேரத்தில் உயர்த்தப்பட்டது உலக சந்தையில் சர்க்கரைக்கு நல்ல உயர்ந்த விலைக்கு கிடைத்து கொண்டிருந்தது. உலக சந்தைகளில் இந்தியாவின் சர்க்கரை விற்பனையாளரின் பங்கு இல்லாததால் பிரேசில் போன்ற நாடுகள் தம்முடைய சர்க்கரையை நல்ல விலைக்கு விற்று லாபம் கண்டனர்.



2005-06ல் நல்ல மழை பொழிவு இருந்தாலும், கரும்பிற்கு நல்ல விலை கிடைத்தாலும் அதிக அளவு கரும்பினை விவசாயிகள் பயிரிட்டனர். அதனால் 2006-07 அரவைப்பருவத்தில் அபரிதமான சர்க்கரை உற்பத்தி ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் உள்நாட்டு விநியோகத்திற்காக கடந்த ஆண்டைவிட தற்போது அதிக அளவு சர்க்கரையை விடுவிப்பு செய்வதாலும் சர்க்கரை விலை மிகவும் குறைந்த போனது.



இந்த சமயத்தில் சர்க்கரை உற்பத்தியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை நீக்கப்பட்டது.



இந்த அரவைப்பருவத்தில் உலக அளவில் சர்க்கரை உற்பத்தி அபரிதமான சமயத்தில் அனுமதிக்கப்பட்ட இந்த ஏற்றுமதியினால் சர்க்கரை விலை ரூ.2100-லிருந்து 1500 ஆக வீழ்ச்சியடைந்து உள்ள நிலையில் உள்நாட்டு சர்க்கரை விலை உயர்வதற்கு பதிலாக குவிண்டால் 1800-யிலிருந்து 1400 ஆக குறைந்துவிட்டது.



கரும்பிற்கான மத்திய அரசின் குறைந்த விலை 1980-81 ஆம் அளவில் டன்னுக்கு 130 ஆக இருந்தது 2006-07ல் 802.50 ஆக ஆறு மடங்கு உயர்ந்துள்ளது. சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செலவு என்னவாக இருந்தாலும் பொது விநியோகத்திற்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய விலை கிலோ ஒன்றுக்கு 3.65 ஆனது. 2006-07ல் 13.50 ஆக நான்கு மடங்குகூட உயரவில்லை. இந்த பொது விநியோக விலை கடந்த நான்கு ஆண்டுகளாக அப்படியே மாற்றப்படாமலும் உள்ளது.



இந்த பொது விநியோகத்தில் ஏற்படும் இழப்பை சர்க்கரை உற்பத்தியாளரின் வெளிசந்தையின் விற்பனையில் இருந்துதான் சரி செய்து கொள்ள வேண்டும். ஆனால் அதிலும் விடுவிப்பு ஆனைகள் மூலம் சர்க்கரை விநியோகத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டு விலை உயர்வை கட்டுப்படுத்த அதிக விடுவிப்பு செய்வது ஏற்றுமதிக்கு தடை செய்து போன்ற நடவடிக்கைகயினால் சர்க்கரையின் விலை உயராமல் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் சர்க்கரை உற்பத்தியாளர்கள் மாற்றுவழிகளில் தங்களை காத்துக்கொள்ள அவாவுற்று இணை மின் நிலையம் அமைத்தலும், எத்தனால் உற்பத்தி போன்ற வகைகளில் தங்களின் தொழிலை விரிவுபடுத்துகின்றனர். அந்நிய செலாவனியை எப்போதும் மிச்சப்படுத்த கூடிய பெட்ரோலுடன் 5% எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டம் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தபடவில்லை. இதே பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டம் 50% என பிரேசில் போன்ற நாடுகளில் நடைமுறைபடுத்துகின்றனர். இவ்வாறான உப தொழிலை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே சர்க்கரை தொழிலை காக்க முடியும்.

நகரத்தை நோக்கி

நகரத்தை நோக்கி


தற்போது போட்டி மிகுந்த நவீன யுகத்தில் மக்கள் வாழ்வதற்காக மிகவும் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மனிதனும் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான உணவு, உடை, உறையுள் ஆகிய தேவைகளை பெறுவதற்காக மிகவும் கடினமாக போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களிடம் வாங்கும் திறன் (Purchasing power) போதுமான அளவிற்கு இருக்க வேண்டும்.

மக்கள் அனைவருக்கும் போதுமான அளவிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் பொருள் ஈட்டும் சூழ்நிலைக்கு உருவாக்கப்பட்டால்தான் இந்த வாங்கும் திறன் தானாகவே மக்களிடம் உயரும்.

அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் திட்டத்தால் ஒரு நாடு ஒரளவு மக்களின் மன நிறைவுடன் வாழ வழி வகுக்கும் சிறந்த திட்டமாகும்.

மக்கள் தாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளை பெறுவதற்காக வேலைவாய்ப்பு அளிக்க கூடிய இடம் நகர்புறங்களே என முடிவு செய்து அனைவரும் நகரத்தைநோக்கி நகரத்தொடங்கு கின்றனர்.

இதனால் ஏற்கனவே அதிக மக்கள் தொகையினால் திண்டாடும் நகரங்கள் மேலும் சிரமப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

உதாரணமாக அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தை எடுத்து கொண்டோமானால் ஒவ்வொருநாள் இரவும் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிரம்பி வழிகின்ற அளவிற்கு மக்கள் கூட்டம் அலை மோதுவது போன்று இருந்தது .

ஏன் நகரத்ததை நோக்கி இவர்கள் செல்கின்றனர்?.கிராாமத்தில் வருடம் முழுவதும் இவர்களுக்கு பணி செய்வதற்கான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நகரங்களுக்கு சென்றால் போதுமான வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் தம்முடைய பெண்டு,பிள்ளைகளை அழைத்துகொண்டு மூட்டை முடிச்சுகளுடன் கிராமத்தை விட்டே செல்லத் தயாராகின்றனர்.

இந்தியா ஓரு விவசாய நாடு என்பதும் 75% மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் தமிழ்நாட்டின் விவசாயம் பருவகாற்றின் சூதாட்டத்தை நம்பியே உள்ளது என்பதும் தெரிந்ததே .

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக போதுமான மழையில்லாத காரணத்தால் விவசாயம் செய்ய வழியில்லாத நிலையில் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் காணி நிலம், கரவை மாடு ஒன்று, காளை மாடு இரண்டு, முருங்கை மரம் ஒன்று ஆகியன இருந்தால் அந்த சிறிய குடும்பம் வாழ்வதற்கு போதுமான வருமானத்தை ஈட்டுகின்ற நிலைமை இருக்கும் என்பது சான்றோரின் அறிவுரையாகும். பருவ மழையின் பகைமையினால் நிலமுள்ளவர்களே அல்லாடுகின்ற சூழ்நிலையில் நிலமற்ற விவசாயிகளின் நிலை சொல்லவே வேண்டியதில்லை.

அதனால் நகரங்கள் தங்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு அளிக்கும் என எண்ணி கூட்டம் கூட்டமாக நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர்.

கிராமத்தில் வாழும் நிலமற்ற கூலிகள் கூட ஒவ்வொரு குடும்பத்தில் ஒரு ஜதை உழவு மாடும், ஒரு கரவை மாடும், ஒண்டுவதற்கு ஒரு குடிசையும், அதில் ஓரமாக ஒரு முருங்கை மரமும் வைத்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நிலத்தை வளமாக்குகின்றோம் என்று நிலவள வங்கிகளும், வணிக வங்கிகளும் டிராக்டர்களை கடனில் வழங்கி ஒரு பக்கம் சில குறு விவசாயிகளை கடனாளியாக்கியது மட்டுமல்லாது நிலமற்ற விவசாயிகளின் உழவு மாடுகளுக்கு வேலையில்லாத நிலையை ஏற்படுத்தி அவைகளை விற்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளின.

சரி உழவு மாடுகளுக்கு பதிலாக டிராக்டர் வந்து கிராமப்புற உழவரிகளின் பிழைப்பை தடுத்தது என்றால் மறுபக்கம் இந்த மாடுகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்களாக பயன்பட்ட கிராமத்துக்கு அருகிலிருக்கும் சிறு சிறு முட்புதர்காடுகளில் அரசானது காடுகளை வளர்க்கிறோம் என்று மண்ணின் அனைத்து நீரினையும் அறவே உறிஞ்சி நீர்வளமற்ற வறண்டபாலையாக்கிடும் யூகலிப்டஸ் என்னும் நீலகிரித்தைல மரங்களை மேய்ச்சல் நிலங்களில் வளர்ந்திருந்த முட்புதர்களை அழித்து பயிரிட்டனர். இதனால் கிராம மக்களின் கால்நடைகளான ஆடு மாடுகள் மேய்ச்சலுக்காக அருகிலிருக்கும் காட்டினை நோக்கி செல்ல முடியாமல் தடுக்கபட்டுள்ளன. இது மட்டுமா, அரை குறை வேலைவாய்ப்பில் கிடைத்த உணவு தானியத்தை சமைப்பதற்காக எரிப்பதற்கு தேவையான விறகு இந்த காடுகளிலிருந்து கிடைத்ததையும் தடுத்து விட்டனர்.

மாடுகளுக்கும் வேலையில்லை மாடுகள் வளர்ப்பதற்கு மேய்ச்சல் நிலங்களும் இல்லை. மழையில்லாததால் மாடுகள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்ற நிச்சயமற்ற நிலையில் தங்களின் ஆடு மாடுகளை அடிமாட்டிற்கு அனுப்பிவிட்டனர்.

அரைகுறையாக வேலைவாய்ப்பை வழங்ககூடிய விவசாய வேலைகளும் மழையில்லாததால் கிடைக்கவில்லை அதில் கிடைத்த உணவு தானியங்களை சமைப்பதற்கு தேவையான எரிபொருள் (விறகு, சுள்ளி) கிடைக்காத நிலையில் மக்கள் உணவுக்கே வழியின்றி நகரங்களுக்கு சென்றால் வயிராற உண்பதற்கு உணவாவது கிடைக்காதா என்ற நம்பிக்கையில் நகரங்களை நோக்கி நகர்கின்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

உணவுத்தேவை மட்டுமல்லாது நகரத்திற்கு சென்றால் தங்களின் பிள்ளைகள் நல்ல தரமான கல்வி பெற்று பெரிய பெரிய பணிக்கு சென்று தங்களையும் தங்கள் குடும்பத்தையும் கரை சேர்ப்பதற்கு ஆவண செய்வார்கள் என்ற அற்ப நம்பிக்கையுடன் தங்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக நடுத்தர மக்கள் நகரத்தை நோக்கி நகருகின்றனர்.

கிராமங்களில் வாழும்போது அவசரஅவசியத்திற்கு போதுமான அடிப்படை மருத்துவ வசதிகூட கிடைக்ககூடிய நிலைமையில் உயிரை காப்பாற்றுகின்ற மருத்துவ வசதி கிடைப்பதற்காக நகரங்களை நோக்கி நகர்கின்றனர்.

ஆக ஒவ்வொரு கிராமத்திற்கு அடிப்படை தேவைகளான மருத்துவ வசதி, தரமான கல்விக் கூடங்கள், அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய திட்டங்கள் என்பனபோன்ற அக்கிராமத்திற்கு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாக்கபட்டால் மட்டுமே கிராம மக்கள் நகரத்தை நோக்கி நகருகின்ற நிலை ஏற்படாது .

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...