வியாழன், 26 ஜூலை, 2012

ஒரு விவசாயியின் எதிர்காலம்?


எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு சிறு விவசாயி. அவருக்கு ஏரிப் பாசனத்தில் நிலமிருந்தது. ஏரிக்கு நீர் வரும் வழிகளில் கல்குவாரிக்காக பள்ளம் தோண்டி கற்களை வெட்டியெடுத்ததால் ஏரியானது முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளாகிவிட்டன. அதனால் விவசாயம் செய்வதற்குச் சிரமமான நிலையில் இருந்தபோது நிலவள வங்கியொன்று புதிய குழாய் கிணறு அமைப்பதற்கு அவருக்கு கடன் கொடுத்தது. டீசல் விற்கும் விலையில் நீர் இறைக்க டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் கையும்காலும்கூட மிஞ்சாது என்பதால் குழாய் கிணற்றிலிருந்து நீர் இறைக்க மின் மோட்டார் அமைத்தால் நல்லது என எண்ணினார்.

மின்வாரியமானது தொழில்துறைகளுக்கெல்லாம் கேட்டவுடன் மின் இணைப்பு கொடுத்துவிடும். ஆனால் ஒரு விவசாயி விண்ணப்பிக்கும்போது மட்டும் வரிசை முன்னுரிமைப்படி தோராயமாக பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் மின் இணைப்பு கொடுப்பதற்கு உத்தரவிடுவார்கள். இதற்கு மாற்று வழியாக மின்வாரியத்தில் ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தினால் உடனடியாக இணைப்பு கிடைக்கும் என்பதால் மின்மோட்டார், இதர உபகரணங்கள் மற்றும் மின்வாரிய வைப்புத்தொகையையும் சேர்த்து நிலவள வங்கியில் நீண்டகாலக் கடனாகப் பெற்று குழாய் கிணறு தோண்டி மின் மோட்டாரும் அமைத்தார்.

அந்த ஆண்டு சிறிதளவு கூடுதலாக மழை பொழிந்தால் நன்செய் பயிர் செய்யலாமே என நெற்பயிரை நட்டு பராமரித்து வந்தார். இதற்கான நடைமுறை மூலதனமாக கைமாற்று வாங்கி சரி செய்தார். நெல் அறுவடையாகி களத்து மேட்டிற்கு வரும்போது கைமாற்றாக வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தும்படி நெருக்கியதால் விளைந்து வந்த நெல்லை வேறுவழியின்றி மிகக் குறைந்த விலைக்கு விற்று கடனைத் தீர்த்தார்.

சரி நிலவள வங்கி மற்றும் இதுபோன்ற கடன் தொல்லையைத் தீர்ப்பதற்கு பணப்பயிரான கரும்பைப் பயிரிட விரும்பினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கரும்புப் பயிரைப் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல விலை கொடுக்கின்றனரே என்று பதிவில்லாமல் பயிரிடலாமே என மனைவியின் காதில் மூக்கில் இருந்த நகைகளை அடமானம் வைத்துப் பயிரிட்டார். அந்த ஆண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததாலும் சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாது கரும்பைப் பயிரிட்டதாலும் “அடிமாட்டு விலைக்கு’ விற்றார்.

கரும்பும் பழி வாங்கிவிட்டது என கலங்கி கரும்பின் வேர்கட்டையை பறித்துப் போட்டு விட்டு, நிலத்தை உழுது, எள்ளைத்தான் விதைத்துப் பார்ப்போமே என முடிவெடுத்தார். அறுவடையின்போது இதுவும் (எள்ளும்) சரியான விலையில் விற்பனை ஆகாததால் வேறு கூடுதல் பணியாக ஆடு வளர்க்கலாம் என்று நிலவள வங்கியிலிருந்து மேலும் கடன் பெற்று ஆடுகள் வாங்கி வளர்த்தார். அந்த ஆடு முழுவதும் நோய் வந்து இறந்து போனதால் இழப்பை ஈடுகட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனத்தை அணுகியபோது பிரிமீயத் தொகை வாங்குவதற்கு மட்டும் குழைய குழையத் தேடி வந்தவர்கள் இழப்பீடு கேட்கும்போது மட்டும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வரியில் இதற்கான விதி சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் இந்த இழப்பீடு தொகை கிடைக்காது எனவும் கூறி கைவிரித்து விட்டனர்.

சரி வேறு என்னதான் செய்வது என எண்ணி மீண்டும் தன்னுடைய நிலத்தில் கத்தரி பயிரிட்டார். திருஷ்டிபடும்படி கத்தரி செடி ஆள் உயரம் வளர்ந்து நல்ல காய் காய்த்தது. இவருடைய துரதிர்ஷ்டம் அந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்ததால் காய் பறித்த கூலி, ஏற்றிச் சென்ற பேருந்துக் கட்டணம் மற்றும் இறக்குக் கூலியைக் கூட கத்தரிக்காயின் விற்பனை வருவாயில் சரிக்கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக இவருடைய நிலத்திற்கு அருகில் சென்ற ஓடையில் பெரிய குழாய்க் கிணறு ஒன்றை அமைத்து நீரை உறிஞ்சியதால் இவருடைய சிறிய குழாய்க் கிணற்றில் நீர் வற்றிவிட்டது. அரசு நிர்வாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு அந்த அளவுக்கு ஆழமாக குழாய்க் கிணறு அமைக்க வசதி இல்லாததாலும் நிலவள வங்கிக் கடனை உடனே திரும்பச் செலுத்தவேண்டிய நிர்பந்தத்தினாலும் என்ன செய்வது என்று தத்தளித்தார். இச்சமயத்தில் நிலவள வங்கியில் கடன் பெற்று நிலுவையாக உள்ளவர்களின் கடனுக்கான வட்டியில் பாதியையும் மற்றும் அசல் தொகை முழுவதையும் செலுத்தினால் எஞ்சிய பாதி வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. உடனடியாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சுற்றத்தாரிடம் கைமாற்றுக் கடன் வாங்கி கால்பங்கு தொகையை அவர் செலுத்தினார். குழாய்க் கிணற்றில் நீர்வற்றிவிட்டதால் தொடர்ந்து நிலத்தில் பயிரிட முடியவில்லை; என்ன செய்வது என நிலத்தை விற்று நிலவள வங்கி மற்றும் இதர கடன்களையாவது தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என எண்ணினார். இதுதான் சமயம் என அவருடைய நிலத்தை மிகக் குறைந்த விலைக்குக் கேட்டனர். கடனை மட்டும் சரி செய்கிற அளவுக்காவது தொகை வந்தால் போதும் என்று நிலத்தை விற்று கடன் அனைத்தையும் தீர்த்துவிட்டார்.

இந்த நடவடிக்கை முடிந்த சமயத்தில் புதியதாகப் பொறுப்பேற்ற அரசு நிலவள வங்கியில் நிலுவையில் உள்ள கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தது. அது மட்டுமன்றி, அவருடைய ஊரின் அருகாமையிலுள்ள தரிசு நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் போவதாகவும் அறிவித்தது. அதனால் அவர் விற்ற நிலத்தை அவரிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கியவர் “யானை விலை குதிரை விலையாக’ மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார். ஆனால் இவரோ இப்போது ஒரு நிலமற்ற ஏழை கூலி விவசாயத் தொழிலாளியாகப் பிழைப்பைத் தேடி நகரத்தை நோக்கிச் சென்றார்.

இவருடைய இந்த நிலைமையை யாரிடம் சென்று முறையிடுவது? இத்தகைய விவசாயிகளைக் காப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொரு கிராமத்திலும் அறுவடை சமயத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்கு ஏதுவாக சிறிது காலம் பாதுகாப்பாக விளைபொருள்களை வைத்திருப்பதற்கான குளிர்பதன கிடங்கை அமைக்க வேண்டும். அதுவரையில் நடைமுறைச் செலவை ஈடுகட்டுவதற்காகக் குறைந்த வட்டியில் இந்த விளைபொருள்களை அடமானம் வைத்துக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் இவரைப் போன்ற விவசாயிகளுக்கு விளைவித்த பயிர்களிலிருந்து முழு வருமானமும் கிடைக்கும். அவர்களின் வாழ்வும் ஏற்றும் பெறும். வங்கிகள் நடைமுறை மூலதனம் வழங்கும்போது பயிர்கள் மூலம் சரியான வருமானம் கிடைக்காதபோது அடுத்த பயிருக்கான கடனை முந்தைய கடனை அடைத்தால்தான் மறுபடியும் கடன் கொடுக்க முடியும் என மறுக்கக் கூடாது.

அதற்குப் பதிலாக மேலும் சிறிது கடனைக் கொடுத்து நொடிந்த விவசாயிகளை கைதூக்க உதவ வேண்டும். விவசாயிகளின் பயிர்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு இழப்பு ஏற்படும்போது காப்பீட்டு நிறுவனங்கள் சரியான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க தகுந்த ஏற்பாடு செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும். அதை மட்டும் செய்தாலே போதும். விவசாயிகள் தற்கொலை பெருமளவில் தடுக்கப்பட்டுவிடும்

(கட்டுரையாளர்: தலைமைக் கணக்கர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு). நன்றி. தினமனி

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...