ஒரு ஊரில் இரு சகோதரர்கள் இருந்தனர் அவர்களுள் ஒருவன் குடிகாரனாகவும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை எப்போதும் அடித்து உதைத்துகொண்டே இருப்பவனாகவும் வாழ்ந்துவந்தான். மற்றொருவன் அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்று அனைவராலும் விரும்பும் நல்ல குடும்பத்தலைவனாகவும் சமூகத்தில் அனைவராலும் விரும்பப்படும் மிகப்பெரிய வியாபாரியாகவும் மதிக்கதக்க நல்லதலைவனாகவும் விளங்கினான்.
அதனால் அந்த ஊரில் இருந்த ஒருசிலருக்கு ஒரே தாய்தகப்பனுக்கு பிறந்து ஒரேகுடும்ப சூழலில் வளர்ந்த இருசகோதரர்களும்எவ்வாறு வெவ்வேறு தன்மையுடன் மாறி யமைந்துவிட்டனர் என்ற மிகப்பெரிய சந்தேகம் வந்தது
அதனை தீர்வு செய்வதற்காக முதல் சகோதரனிடம் “தம்பி!நீஏன் இவ்வாறு மகாகுடிகாரனாக மாறி உன்னுடைய வீட்டில் உள்ளவர்களை அடித்து உதைக்கின்றவனாக இருக்கின்றாய்?” என வினவியபோது, “எங்களுடைய தந்தை மகாகுடிகாரனாக இருந்தார் எப்போதும் வீட்டிற்கு வந்துவீட்டில் உள்ளவர்களை அடித்து உதைப்பவராக வாழ்ந்துவந்ததை நான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து பார்த்து வளர்ந்து வந்தேன் அதனால் நாமும் அவ்வாறே இருக்கலாம் எனமுடிவுசெய்து அவ்வாறே தற்போது இருந்துவருகின்றேன்.” என்றான்.
இரண்டாம் சகோதரனிடம் அவ்வாறே “தம்பி! ஒரே தாய்தகப்பனுக்கு பிறந்து ஒரேகுடும்ப சூழலில் வளர்ந்த உங்கள் இருவரில் நீமட்டும் எப்படி அனைவராலும் மதிக்கதக்க நலலதலைவனாகவும் மற்றொருவன் குடிகாரனாகவும் மாறிவிட்டீர்கள்?” என வினவியபோது, “ எங்களுடைய தந்தை மகாகுடிகாரனாக இருந்தார். எப்போதும் வீட்டிற்கு வந்துவீட்டில் உள்ளவர்களை அடித்து உதைப்பவராக வாழ்ந்துவந்ததை நான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து பார்த்து வளர்ந்து வந்தேன். அதனால், நாம் அவ்வாறில்லாமல் அனைவராலும் மதிக்கதக்க நல்லதலைவனாக வாழவேண்டும் என முடிவுசெய்து அதன்படி வாழ்ந்துவருகின்றேன்.” எனக்கூறினான்.
நாம் வாழும் சூழல் ஒன்றாக இருந்தாலும் அதனை அவரவர்கள் எவ்வாறு தங்களுக்கு முன்மாதிரியாக அதாவது அதற்கு எதிர்மறையாகவோ அல்லது நேராகவோ எடுத்து கொள்வதற்கேற்ப நல்லமனம் நல்லதையே நாடும் என்ற அடிப்படையில் அவரவர்களுடைய வாழ்க்கையும் மாறியமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக