செவ்வாய், 18 நவம்பர், 2014

வீனாக ஆராவாரமிட்டு கூச்சலிட்டு நம்முடைய சமூக சூழலை உருக்குலைப்பதில் கவணமாக இருக்கின்றோம் ஆனால் அந்த நிகழ்விற்கான மிகச்சரியான தீர்வைமட்டும் காணதவறுகின்றோம்


ஒரு சிற்றுண்டி உணவகத்தில் குழுவான பெண்கள் சிற்றுண்டி அருந்த சென்று இருக்கைகளில் அமர்ந்து தங்களுக்கு தேவையான சிற்றுண்டி உணவுவகைகளுக்கு உத்தரவை இட்டுவிட்டு குழு விவாதங்களில் ஈடுபட்டனர்

இந்நிலையில் வெட்டுகிளியொன்று ஒரு பெண்ணின் தோளின்மீது வந்து அமர்ந்ததும் அந்த பெண் கூச்சிலிட்டவாறு அந்த வெட்டுகிளியை அடித்து விரட்டுவதற்காக தாண்டிகுதித்து பார்த்தது எகிறி குதித்து பார்த்தது ஆனாலும் அந்த வெட்டுகிளி இடம் மாறாமல் அமர்ந்திருந்து

இந்த பெண்ணின் அளவிற்கதிகமான அதிகமான உடல் அசைவினால் உடன் அந்த வெட்டுகிளி எழுந்து பறந்து சென்று அடுத்தமர்ந்திருந்த பெண்ணின் தோளின்மீது சென்றமர்ந்ததும் இதே நிகழ்வு அந்த பெண்ணிடமும் தொடர்ந்தது மூன்றாவதாக ஒரு பெண்ணின் மீது அந்த வெட்டுகிளி அமர்ந்தது அந்தபெண்ணிடமும் இதே நிகழ்வு தொடர்ந்தது

இதனால் இவ்விட்ததில் என்ன நிகழ்வு நடைபெறுகின்றது என தெரிந்துகொள்ளஅந்த சிற்றுண்டி உணவகத்தின் பரிமாறுபவர் உடன் இவர்களின் அருகில்வந்தார் உடன் அந்த வெட்டுகிளி அந்த பரிமாறுபவரின் தோளின்மீது சென்றமர்ந்தபின்னர் இந்த பெண்களின் குழு சிறிது அமைதியாக அமர்ந்தது

அந்த சிற்றுண்டி உணவகத்தின் பரிமாறுபவர் இந்த பெண்கள் செய்தவாறு கத்தி கூச்சலிட்டு குதித்தோடியவாறு செய்திடாமல் அந்த வெட்டுகிளியை மிகச்சரியாக பிடித்து கொண்டுசென்று வெளியில் கிடாசிவிட்டுவந்தார்

ஆம் நாம் அனைவரும் எந்தவொரு நிகழ்வையும் அதற்கான மிகச்சரியான தீர்வு என்ன என காணமுயலாமல் ஆராவாரமிட்டு கூச்சலிட்டு நம்முடைய சமூக சூழலை உருக்குலைப்பதில் கவணமாக இருக்கின்றோம் ஆனால் அந்த நிகழ்விற்கான மிகச்சரியான தீர்வைமட்டும் காணதவறுகின்றோம்

வெள்ளி, 14 நவம்பர், 2014

நமக்கு கிடைத்த இந்த வாழ்வை ஏற்று மிகமகிழ்ச்சியாக இருந்துவருவோம்


ஓருகாட்டில் காகம் ஒன்று அமைதியாகவும் மிகமகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தது இந்நிலையில் அன்னப்பறவை ஒன்று அந்த வழியாக பறந்து சென்றதை பார்த்ததும் அந்த காகமானது 'அடடா! நாம் எவ்வளவு கருமையாக இருக்கின்றோம் ! இந்த அன்னப்பறவை எவ்வளவு வெண்மையாக இருக்கின்றது! மிக மகிழ்ச்சியாகவும் இருக்கின்றதே !' என வருத்தபட்டது.

அதனை தொடர்ந்து இந்த காகமானது அன்னப்பறவை வசிக்குமிடம் சென்று ''அன்னப்பறவையே ! நீ எவ்வளவு வெண்மையாகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றாய் அதற்கான இரகசியசம் யாது?'' என வினவியது .உடன் ''அடபோ காகமே! நானும் என்னுடைய இரட்டை வண்ணத்தை கண்டு மிக கர்வமாக கொஞ்சகாலம் ஒரு பலவண்ண மயிலை பார்க்கும்வரை இருந்தேன்.

அதன்பின்னர் அடடா! நமக்கு அந்த மயிலை போன்று பல வண்ணங்கள் இல்லையே ? என வருத்தத்தில் இருந்துவருகின்றேன்' ,'' என மன வருத்தத்துடன் கூறியது. அதனை தொடர்ந்து காகமும் அடுத்ததாக அந்த மயிலை சென்றுபார்த்து ''மயிலே! நீ பலவண்ணங்களுடன் மிகஅழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றாய் அதற்கான இரகசியசம்தான் யாது ?'' என வினவியது

உடன் ,'' அடபோ காகமே ! நானும் என்னுடைய பலவண்ணத்தை கண்டு மிக கர்வமாக கொஞ்சகாலம் இந்த விலங்குகளின் பூங்காவிற்குள் என்னை கொண்டுவந்து அடைக்கும்வரை இருந்தேன் இப்போது என்னை பலர் பார்த்துதான் செல்கின்றனர் ஆனால் உன்னை போன்று சுதந்திரமாக பறந்து சென்று இரைதேடவும் ஆடிபாடவும் முடியவில்லையே என வருத்தத்தில் இருந்துவருகின்றேன் என மன வருத்தத்துடன் கூறியது

உடன் காகமானது அடடா நாம் எவ்வளவு சுதந்திரமாக எங்குவேண்டுமானாலும் பறந்துசென்று இரைதேடி உண்டு மகிழ்வுடன் இருந்துவருகின்றோம் என மகிழ்வுடன் தன்னுடைய கூட்டிற்கு திரும்பி வந்தது

ஆம் நன்பர்களே நாம் அனைவரும் நம்மைவிட மற்றவர்கள் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக தவறாக எண்ணி நம்முடைய வாழ்வை நாமே கெடுத்துகொண்டு வருகின்றோம் அதனை தவிரத்து நமக்கு கிடைத்த இந்த வாழ்வை ஏற்று மிகமகிழ்ச்சியாக இருந்துவருவோம்

வியாழன், 13 நவம்பர், 2014

நேர்மறையாக பராமரித்து நமக்கு ஏற்படும் தீங்குகளையும் இன்னல்களையும் தவிர்த்திடுவோம்


ஒருஅரசன் தன்னுடைய அரசசபையில் உள்ளவர்களிடம் முந்தைய நாள் இரவு தன்னுடைய கனவில் தன்னுடைய பற்கள் முழுவதும் கொட்டிவிடுவதாக கண்டதாகவும் அதற்கான பொருள் என்னவென்றும் வினவினார்

உடன் அந்த அரசசபையில் அமர்ந்திருந்த்தில் ஒருவன் எழுந்து அரசே உங்களுடயை குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் விரைவில் இறந்துவிடுவார்கள் என்பதுதான் அந்த கனவின் பொருள் ஆகும் என கூறியதும்

உடன் அரசனுக்கு கோபம் அதிகமாகி தன்னுடைய காவல்வீரர்களை அழைத்து அம்மனிதனை தூக்கிலிடுமாறு உத்திரவிட்டார்

பின்னர் மற்றொருவனை அழைத்து தன்னுடைய கனவிற்கான உண்மையான பொருளை கூறுமாறு பணித்தார்

இரண்டமாவன் அரசே நீங்கள் உங்களுடைய குடும்பத்தாரை விட நீண்டநாட்கள் உயிர்வாழ்வீர்கள் என கூறியதை தொடர்ந்து அவ்வரசன் தன்னுடைய நிதி அமைச்சரை அழைத்து இரண்டாமவனுக்கு ஏராளமான தங்க காசுகளும் பொருளும் கொடுக்குமாறு உத்திரவிட்டார்

ஆம் இவ்விருவரும் ஒரே பதிலை எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் என இரண்டு வெவ்வேறு கோணத்தில் கூறி அதற்கேற்ற பலனை உடன் அனுபவித்தனர் நாமும் நம்முடைய செயல் சொல் போன்றவைகளை நேர்மறையாக பராமரித்து நமக்கு ஏற்படும் தீங்குகளையும் இன்னல்களையும் தவிர்த்திடுவோம்

புதன், 12 நவம்பர், 2014

வாழ்க்கையின் சிறந்த தருணம் எது?


அது ஒரு இளவேணிற்காலமாக இருந்தது, இன்னும் இரண்டு நாட்களில் என்னுடைய வயது முப்பது ஆக உயரபோகின்றது . நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தசாப்தத்தில் நுழைவதை பற்றி பாதுகாப்பற்று இருப்பதாக உணருகின்றேன் மேலும் என்னுடைய வாழ்வின் வசந்தகாலம் இதன் பின்னர் மட்டுமேஇருப்பதாகவும் அச்சபடுகின்றேன் இந்நிலையில் நான் என்னுடைய அன்றாட பணிக்கு செல்லுமுன் தினமும் பயிற்சிக்காக ஒரு உடற்பயிற்சி கூடத்துக்கு செல்கின்றேன். அவ்வாறு அந்த உடற்பயிற்சிகூடத்திற்கு செல்லும்போது அங்கு தினமும் காலையில் என்னுடைய நண்பர் ஒருவரை சந்திக்கின்றேன். அவருடைய வயது எழுபத்தொன்பதாக இருந்தாலும் கட்டுகுலையாத உடல் வடிவில் அவர் இருந்தார். அதனால் அன்று அந்த நண்பரை முகமன்கூறி வரவேற்று வணங்கியபோது , அவர் '' நீங்கள் இன்று வழக்கமான முழு உற்சாகத்துடன் இல்லையே ஏன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?'' என என்னிடம் வினவினார் . அதற்கு. நான் "எனக்கு வயதுமுப்பது ஆவது பற்றி மிகஆர்வத்துடன் இருக்கின்றேன் இருந்தாலும். நான் உங்களுடைய வயது அடையும்போது நான் என்னுடை வாழ்க்கையை திரும்பி பார்த்தால் எவ்வாறு இருக்கும் என ஆச்சரியப்படுகின்றேன் ", எனக்கூறியதுடன் தொடர்ந்து அவரிடம், " அதனால் உங்களுடைய வாழ்க்கையின் வசந்த காலமாக இருந்தது எது?" என கேட்டேன்.

உடன் அவரும் தயக்கம் இல்லாமல், " எல்லாம் சரிதான் தம்பி , உங்களுடைய இந்த தத்துவமான கேள்விக்கு என்னுடைய பின்வரும் தத்துவமான பதிலை கூறுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள் ", என்று கூறினார்:

",நான் முதன்முதலில் ஒரு குழந்தையாக இருந்தபோது எனக்கு தேவையான அனைத்தையும் வழங்கி என்னை என் பெற்றோர்கள் நன்றாக கவனித்து வளர்த்தனர் , அதுவே என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக உணர்ந்தேன் ."

"அதன்பின்னர் நான் பள்ளிக்கு சென்று இன்று எனக்கு தெரிந்துள்ள அனைத்து செய்திகளையும் கற்று போது , என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக அதனை உணர்ந்தேன் ."

"பின்னர் நான் வாழ்க்கையில் வாழ்வதற்கான என்னுடைய முதல் பணி எனக்கு கிடைத்தது அதனோடு பொறுப்புகளும் சேர்ந்திருந்தது அந்த பணியில் என்னுடைய முயற்சிகளுக்கேற்ற பொருள் ஈட்டியபோது , என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக அதனை உணர்ந்தேன் ."

",அதன்பின்னர் நான் என்னுடைய வாழ்க்கை துனைவியான மனைவியை முதன்முதலில் சந்தித்து அன்பு செலுத்திய போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

"பின்னர் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து எங்களுடை உயிர்களை காப்பாற்ற நம்முடைய நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதற்காக வெளிநாட்டிற்கு சென்ற ஒரு கப்பல் மீது ஒன்றாக பாதுகாப்பாக சென்றுகொண்டிருந்த போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாகஅது இருந்தது."

"அதன்பின்னர் போர்முடிந்து நாங்கள் நம்முடைய நாட்டிற்கு திரும்பிவந்து வழக்கமான எங்களுடைய குடும்ப வாழ்க்கையை தொடங்கிய போது , என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

"பின்னர் எங்களுடைய குழந்தைகள் எங்களுக்கு பிறந்து வளர்ந்தபோது அவர்களை நான் ஒரு இளம் தந்தையாக நாங்கள் சிறந்த பெற்றோர்களாக அவர்களை கவணித்து வளர்த்து வந்தபோது, என்னுடைய வாழ்வின் சிறந்த நேரமாக அது இருந்தது."

" நண்பரே, இப்போது எனக்கு எழுபத்தி ஒன்பது வயதாகிறது. நான், நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றேன் மேலும் என்னுடைய மனைவியை நான் முதன் முதலில் சந்தித்தபோது இருந்த அதே அன்புடன் இப்போதும் அவர்களை நேசிக்கின்றேன் . இதுவே என்னுடைய வாழ்க்கையில் சிறந்த நேரமாக உணருகின்றேன். "

"அதனால் நாம் எப்போதும் நமக்கு கிடைத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையே நம்முடைய இறுதி இலக்கு அன்று என்பதை நினைவில் கெள்க மேலும் நாம்முடைய வாழ்க்கையின் சிறந்த தருனம் மிகவிரைவில் நமக்கு வரவுள்ளது என எண்ணி எப்போதும் செயல்படுக" என எனக்கு அவர் அறிவுரை கூறினார்.

சனி, 30 ஆகஸ்ட், 2014

எதையும் தவறாக யூகித்து மற்றவர்களின் மனத்தை துன்பறுத்த கூடாது


மிககர்வமுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் ஒருவர் தன்னுடைய மாவட்டத்தின் ஏதாவதொரு கிராமத்தை சுற்றி பார்வையிட்டு வர விரும்பினார்

அதனால் வெகுதூரத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றிற்கு பாதுகாப்பிற்கு உதவியாளர், பாதுகாவலர் ஆகிய எவரும் இல்லாமல் நான் இந்த மாவட்டத்திற்கே படிஅளக்கும் அரசு அதிகாரி என்னை யாரும் எதிர்த்து கேள்வி யொன்றும் கேட்கவும் வாதிடவும் முடியாது என்னை யாரும் ஏமாற்றவும் முடியாது என இறுமாப்புடன் தனியாக அரசு வாகணத்தில் சென்று அந்த கிராமத்தின் எல்லையிலிருந்த ஒரு விவசாயியின் விட்டிற்கருகில் வண்டியை நிறுத்தி இறங்கியவுடன் அந்த விவசாயியை அழைத்தார் .

"உன்னுடைய நிலத்தில் கஞ்சாசெடி வளர்ப்பதாக தகவல் வந்துள்ளது அதனால் உன்னுடைய நிலத்தினை சுற்றி பார்க்கவேண்டும்" எனகூறியபோது "நல்லது! ஐயா !நிலமெல்லாம் சுற்றிபாருங்கள் நான் தடுக்கவில்லை. ஆனால் ,அந்த கூறை கொட்டகை பக்கம் மட்டும் போகாதீர்கள்!" என கூறியவுடனேயே "நான் இந்த மாவட்டத்தின் ஆட்சிதலைவர் தெரியுமா?" என தன்னுடைய சட்டைபையில்ஒட்டி வைத்திருந்த மாவட்ட ஆட்சி தலைவர் என்ற பட்டியை தூக்கிபெருமையுடன் காண்பித்து "என்னை யாரும் எங்கு சென்றாலும் தடுக்கவோ வழிமறிக்கவோ முடியாது! நீ முக்கியமாக கஞ்சாவியாபாரத்தை அந்த கூறை கொட்டகையில் தான் செய்கிறாய் போலும் அதனால் என்னை தடுக்க நினைக்கின்றாய் நான் அங்கு சென்று பார்வையிடுவதை நீ தடுக்கவே முடியாது "என கோபமாக கூறியதை தொடர்ந்து அந்த விவசாயியும் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார் ..

மாவட்ட ஆட்சிதலைவரும் அந்த விவசாயியின் நிலமெல்லாம் சுற்றி பார்வையிட்டு ஒன்றும் கஞ்சா செடியில்லாததை உறுதிபடுத்திகொண்டாலும அந்த கூறை கொட்டகையில் கண்டிப்பாக அந்த விவசாயி கஞ்சா செடியை காயவைத்து மறைத்துவைத்திருப்பார் நாம் போய் கையும் களவுமாக பிடித்துவிடலாமென அந்த கூறை கொட்டகையை திறந்து உள்ளே போக முனைந்து கூறை கொட்டகையின் வாயில் கதவை திறந்து உள்நுழைந்த வுடனேயே அங்கிருந்த மிகவலுவான கொம்பேறிமூர்க்கன் காளையொன்று அந்நிய நபர் அந்த கொட்டகையினுள் நுழைந்ததால் கோபமுற்று கட்டியிருந்த தாம்புக் கயிற்றினை அறுத்துகொண்டு அந்த மாவட்ட ஆட்சி தலைவரை முட்டித்தள்ளுவதற்கு மிக ஆக்ரோசமாக அவரை நோக்கி ஓடிவந்தது.

அதனை கண்ணுற்றதும் துண்டை காணோம் துனியை காணோம் என தன்னுடைய உயிரை காப்பற்றிகொள்ளவேண்டிய சூழலில் அந்த மாவட்ட ஆட்சி தலைவர் மிகவேகமாக ஒடிவந்தார்

அதனை கண்ணுற்ற அந்த விவசாயி உடன் அநத மாவட்ட ஆட்சிதலைவரை காக்கவேண்டும் என்ற உத்வேகத்தில் தன்னுடைய கையிலிருந்த கொம்பை தூக்கி ஓடிவரும் கொம்போறிமூர்க்கன் காளையின் முன்புறம் வீசியெறிந்தார்

உடன் அந்த மூர்க்கமாக ஓடிவந்த காளையும் சத்தியத்திற்கு கட்டுபட்டவாறு அப்படியே நின்று விட்டது

உடன் அந்த விவசாயி" நான் அவ்வாறெல்லாம் கஞ்சாவை பயிரிடவில்லை ஐயா! உங்களுக்கு தவறான தகவல் யாரோ கொடுத்துள்ளனர் இருந்தாலும் பத்திரமாக சென்றுவாருங்கள்" என மாவட்ட ஆட்சிதலைவரை அவருடை வண்டியில் ஏற்றி பத்திரமாக செல்லுமாறு பாதுகாத்து அனுப்பி வைத்தார் . ஆம் எதையும் நாம் தவறாக யூகித்து மற்றவர்களின் மனத்தை துன்பறுத்த கூடாது!

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நாம் நம்முடைய கடமையை சரியாக திறமையாக செய்தால் நமக்கு கிடைக்கவேண்டியபதவி உயர்வு தானாகவே வந்து சேரும்


ராமு சோமு எனும் இரு நண்பர்கள் ஒரே மருத்துவ கல்லூரியில் ஒரேமாதிரியான மருந்தாளுநர் எனும் இளங்கலை கல்வியை பயின்று பட்டம் பெற்ற பின்னர் ஒரே மருந்து நிறுவனத்தில் விற்பனையாளராக பணியில் சேர்ந்தனர் பத்தாண்டுகள் அவ்விருவரும் மருந்து விற்பணையாளராக மிக்கடுமையக பணிபுரிந்து கொண்டிருந்தபோது அந்நிறுவனத்தின் நிருவாகமானது ராமுவை மட்டும் விற்பனை மேலாளராகபதவி உயர்வு வழங்கியது

ஆனால் சோமுவையும் அவருடையை கடினஉழைப்பையும் கண்டுகொள்ளாமல் அப்படியே பதவி உயர்வு வழங்காமல் அவருடைய நண்பனின் கீழ் வழக்கம்போன்ற விற்பனை யாளராக பணிபுரியுமாறு விட்டுவிட்டனர்

இதனால் ஆத்திரமடைந்த சோமுவானவர் நிருவாக அலுவலரை நேரில் சந்தித்து நீங்கள் செய்வது நியாயமான செயலா மனதை தொட்டு சொல்லுங்கள் ராமுவும் நானும் ஒரே கல்லூரியில் மருந்தாலுநர் பட்டம் பெற்று ஒரே நாளில் இந்த நிறுவனத்திற்கு விற்பனை பிரதிநிதியாக பணியில்சேர்ந்து மிக்கடிணமாக உழைத்து வருகின்றோம் ஆனால் என்னை மட்டும் விட்டுவிட்டு என்னோடு பணியில் சேர்ந்த ராமுவிற்கு மட்டும் எவ்வாறு விற்பனை மேலாளராக பதவி உயர்வு வழங்கிடமுடியும் என்னுடைய பணியை நீங்கள் அங்கீகரிக்கவேயில்லை அதனால் நான் என்னுடைய பணியிலிருந்து நின்று கொள்கின்றேன் என தன்னுடைய பணிவிலகல் கடிதத்தை கொடுத்தார்.

நிருவாக அலுவலர் சிறிது நேரம் காத்திருங்கள் என சோமுவிடம் கூறி நம்முடைய நகரில் உள்ளமருந்து கடைகளில் சர்க்கரை வியாதிக்கு ஊசிமருந்து இருக்கின்றதா வென பார்த்து வருமாறு ராமு சோமு ஆகிய இருவரையும் பணித்தார் உடன் சோமு பக்கத்திலிருந்த கடைக்கு சென்று இன்சுலின் ஊசிமருந்து இருப்பதாக திரும்பிவந்து கூறியதை தொடர்ந்து அது R வகையா அல்லது Nவகையா என திரும்பவும் விசாரிக்கும் படி கூறினார் மீண்டும் சென்றுவந்த சோமு R , N ஆகிய இரு வகைகளிலும் இருப்பதாக கூறினார் மீண்டும் அவற்றினுடைய விலை அதன்பின் எவ்வளவு கையிருப்பில் உள்ளன என்பன போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் சோமுவானவர் அருகிலிருந்த கடைக்கு சென்ற விசாரித்து வந்து பதில் கூறி எரிச்சல் அடைய வைத்து கொண்டிருந்தார்

இந்நிலையில் ராமுவானவர் என்னென்ன நிறுவனத்தின் என்னென்ன வகையான இன்சுலின் ஊசிமருந்துகள் எந்தெந்த கடைகளில் எவ்வளவு கையிருப்பில் உள்ளன அவைகளின் விற்பனை விலை விவரம் அவைகள் எந்த நாள்வரையில் பயன்படுத்தமுடியும் கழிவு போக மிகுதி என்னவிலைக்கு விற்பனை செய்கின்றனர் என்பன போன்ற அனைத்து விவரங்களையும் நிர்வாக அலுவலர் கேட்காத கேள்விக்கும் சேர்த்து பதிலளித்து கொண்டிருந்தார் அருகில் சோமுவும் பார்த்து கொண்டிருந்தார். “சோமு! நான் ஏன் ராமுவை விற்பனை மேலாளராக பதிவிஉயர்வு வழங்க பரிந்துரை செய்தேன்? என்பதை இப்போது பார்த்தாயா! நீயும் அதைபோன்று எள் எனும் முன்பு எண்ணெய்யாக இருந்தால் பதவிஉயர்வு உனக்கு தானாகவே வந்து சேரும். போய் விற்பனையாளர் பணியையாவது ஒழுங்காக செய்” என அறிவுறுத்தி அனுப்பினார்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

உண்மையில் காகம் ஏமாந்ததா?


ஒருஊரில் அவ்வூரின் ஓரத்தில் இருந்த பெரியஆலமரத்தின் கீழ் பாட்டி ஒருவர் தன்னுடைய பிழைப்பிற்காக வடைசுட்டு அகலமான தட்டில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். அப்போது பசியோடிருந்த காகமொன்று தனக்கு ஏதேனும் இரைகிடைக்குமாவென பறந்து அலைந்து திரிந்து பார்த்து அந்த ஆலமரத்திற்கு வந்து சேர்ந்தது. தன்னுடைய பசியை போக்குவதற்காக அந்த பாட்டி ஏமாந்தநேரமாக பார்த்து அவர் விற்பதற்காக தட்டில் வைத்திருந்த வடைஒன்றை எடுத்துகொண்டு பறந்து சென்ற அருகிலிருந்த மற்றொரு மரத்தின் கிளையில் சென்றமர்ந்து அந்த வடையை தின்று பசியாறலாம் என முயன்றபோது அவ்வழியே வந்த நரியொன்று அதே மரத்தின் நிழலில் சிறிதுநேரம் ஓய்வு கொள்வோம் என நின்றது

உடன் அடடா வடைவாசனை வருகின்றதே எங்கிருந்து வருகின்றது எனசுற்றுமுற்றும் பார்த்துஏதும் காணாததால் உயரே அன்னாந்து பார்த்தபோது காகம் தன்னுடைய வாயில் வடையொன்றை கவ்விகொண்டு இருப்பதை பார்த்து அதனை எப்படியாவது அபகரிக்கவேண்டும் என தந்திரமாக காகமே காகமே உன்னுடைய குரல் எவ்வளவு இனிமையானது தெரியுமா அதனால் உன்னுடைய வாயால் ஒரு பாட்டினை பாடுகின்றாயா கேட்டுமகிழலாம் என கூறியவுடன் அக்காகமானது நம்முடைய குரலை கேட்ககூட நபர் ஒருவர் ரசிகராக இருக்கின்றாரா என உளம் மகிழ்ந்து தன்னுடைய வாயால் காகா என கூவ ஆரம்பித்தது உடன் அதனுடைய வாயில் வைத்திருந்த வடையானது கீழே விழுந்தது அதனை நரிஎடுத்துகொண்டு ஓடிவிட்டது காகம் தன்னுடைய பசியை போக்க வழிஇல்லாமல் ஏமாந்தது என நாமெல்லோரும் சிறுவயதிலேயே இந்த கதையை தெரிந்து வைத்துள்ளோம்

ஆனால் இதே கதையை பிற்காலத்தில் அந்த நரி அவ்வாறு காகத்தின் குரலை கேட்பதாக கூறியவுடன் நரியின் தந்திரத்தை தெரிந்துகொண்டு வடையை வாயிலிருந்து கால்களுக்கு மாற்றி கால்களால் பிடித்து கொண்டு காகா என கூவியது அதனால் வடைஎதுவும் தரையில் விழவில்லை தன்னுடைய தந்திரம் எதுவும் இந்த காகத்திடம் பலிக்காது என நரி வேறு ஏதாவது உணவு இருக்கின்றதா பார்ப்போமென தன்னுடைய வழியே செல்ல ஆரம்பித்தது என மாற்றியமைத்ததையும் நாமெல்லாம் அறிவோம் நாமெல்லோரும் இந்த ஏமாந்த காகம் என்ற கதையின் கருத்து என்ன வென அறிந்து தெளிவுபெறாமலேயே இதுவரை இருந்து வருகின்றோம் என்பதே உண்மை நிலவரமாகும்

அதாவது காகம் எனில் மிக கருமையாக இருக்கும் அதனால மனிதர்களில் கருமைநிறத்தில் இருப்பவர்களை அண்டங்காக்கை என நக்கலாக கூப்பிடுவதை கேள்விபட்டிருக்கின்றோம் அவ்வாறே அது கழிவையும் இதரபொருட்களையும் உண்டு சுத்தபடுத்துவதால் காகமானது ஊரின் தோட்டி என கூறுவதையும் கேள்விபட்டிருக்கின்றோம் அதேபோன்று அதன் குரலும் கரகரவென யாருக்கும் பிடிக்காது

இதனை தொடர்ந்து தன்னுடைய உருவத்தையும் குரலையும் யாருக்கும் பிடிக்காது எனஅந்த காகம் தாழ்வுமனப்பான்மையில் மனத்தின் அடியில் வேதனையோடு இருந்து வந்தது அதனால் நரி அந்த காகத்தின் குரல் இனிமையாக இருக்கின்றது அதனுடைய வாயால் ஒருபாட்டு பாடினால் அதனே கேட்பதாக புகழ்ந்து கூறியவுடன் அப்புகழிற்கு மயங்கி நம்முடையு உருவத்தைதான் அனைவரும் பழிக்கின்றார்கள் தன்னுடைய குரலை கேட்பதற்காகவாவது ரசிகர் ஒருவர் கிடைத்தாரே என அகமகிழ்ந்து தன்னுடைய தற்போதைய இருப்பை மறந்து வாயை திறந்து காகா என கூவியது என கதை முடிவதை அறிந்து கொள்வோமாக.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...