ஞாயிறு, 5 மே, 2013

நடைபெறும் செயல் ஒன்றுதான் அதன் பலன் அவரவருடைய மனதிற்கு மட்டுமே தெரியும்


ஒரு அரசனிடம் ஆலோசனை கூறுவதற்காக மதியூக மந்திரியும் ஊரின் பாதுகாப்பிற்காக ஊர்காவல் தளபதியும் பணிபுரிந்து வந்தனர் மந்திரிக்கு ஒரு மகன் இருந்தான்

அவனிடம் தினமும் ஊர்காவல் தளபதி தன்னுடைய ஒரு கைநிறைய தங்ககாசுகளையும் மற்றொரு கைநிறைய வெள்ளிக்காசுகளையும் வைத்துகொண்டு "இவைகளில் மதிப்புமிக்க பொருள் எவையோ அவற்றுள் ஒரு காசு எடுத்துகொள்" என கோரிய போதெல்லாம் "வெள்ளிக்காசுகளே மதிப்பு மிக்கவை" என கூறி வெள்ளிக்காசுகளை வைத்துள்ள கையிலிருந்து ஒரு வெள்ளி காசைமட்டும் எடுத்து சட்டைபையில் வைத்துகொண்டு படிப்பதற்கான பள்ளிக்கு செல்வது வழக்கமாகும்

உடன் அருகிலிருப்போரெல்லாம் "ஹா ஹா பார்த்தீர்களா மதியூக மந்திரியின் பிள்ளை எவ்வளவு முட்டாள்" என ஏளனம் செய்து கைகொட்டி சிரித்தனர்

அதனால் ஒருநாள் அந்த ஊர்காவல் தளபதியும் மதியூக மந்திரியிடம் "என்ன மந்திரியாரே நீங்கள் சிறந்த அறிவாளியாக இருக்கின்றீர் நம்முடைய நாட்டு அரசனுக்கே ஆலோசனை கூறுகின்ற அளவு புத்தி சாதுரியமாக உள்ளீர் ஆனால் உங்களுடைய மகன் சாதாரணமாக வெள்ளி காசிற்கும் தங்ககாசிற்கும் மதிப்பு வித்தியாசம் தெரியாதவனாக வளர்த்து வருகின்றீரே" என நக்கலோடு கூறினார்

அன்று இரவு மந்திரி தன்னுடைய வீட்டிற்கு திரும்பியவுடன் தன்னுடைய மகனை அழைத்து "வெள்ளி காசு தங்ககாசு ஆகிய இரண்டிலும் எது மதிப்பு மிக்கது" என வினவியபோது "தங்ககாசு தான் மதிப்புமிக்கது" என உடனே பதிலிருத்தான் "சரிமகனே ஆனால் நம்முடைய ஊர்க்காவல் படைத்தளபதியிடம் மட்டும் ஏன் வெள்ளிக்காசுதான மதிப்புமிக்கது என கூறுகின்றாய்" என தொடர்ந்து வினவியபோது அம்மந்திரியின் மகன் தான் தங்கியுள்ள அறைக்கு மந்திரியை அழைத்து சென்ற அங்குள்ள பெட்டியில் சுமார் நூறு வெள்ளி காசுகள் இருப்பதை காண்பித்து "நான் தங்ககாசுதான் மதிப்பு மிக்கது என கூறியிருந்தால் ஒரே ஒரு தங்ககாசோடு அந்த விளையாட்டு முடிந்துவிட்டிருக்கும் ஆனால் நான் வெள்ளிக்காசுதான் மதிப்புமிக்கதுஎனக்கூறியதால் தினமும் இந்த விளையாட்டு நடக்கின்றது என்னிடமும் சுமார் நூறுகாசுகள் சேர்ந்துள்ளன " என கூறினான்

ஆம் நடைபெறும் செயல் ஒன்றுதான் ஆனால் அந்த செயலானது அவரவருடைய நோக்கில் ஒருவருக்கு சரியாகவும் மற்றொருவருக்கு தவறாகவும் மாறுபட்டு தோன்றிடும் ஆனால் இதில் யார்வெற்றி பெறுகின்றார்கள் யார் தோல்வியுற்றார்கள் என்பது அவரவருடைய மனதிற்கு மட்டுமே தெரியும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...